டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை - 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றி
18 ஐப்பசி 2024 வெள்ளி 10:38 | பார்வைகள் : 924
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி தம்புள்ளா மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மேன் பவல்(Rovman Powell) 27 பந்துகளில் 37 ஓட்டங்களும், மோட்டி(Motie) 15 பந்துகளில் 32 ஓட்டங்களும் குவித்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஹசரங்கா மற்றும் தீக்ஷனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது, தொடக்க வீரராக களமிறங்கிய பாத்தும் நிஸ்ஸங்க 39 ஓட்டங்கள் குவித்தார்.
குசல் பெரேரா-வுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 68 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
குசல் பெரேரா 36 பந்துகளில் 55 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார். இதன் மூலம் 18 ஓவர்கள் முடிவிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து இலங்கை அணி 166 ஓட்டங்கள் குவித்தது.
அத்துடன் இந்த 3வது போட்டியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.