அரசு விழா பாடலில் பிழை: ஸ்டாலின் அவசரம்
19 ஐப்பசி 2024 சனி 03:22 | பார்வைகள் : 1223
துார்தர்ஷன் விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ஏற்பட்ட ஒரு பிழை, தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும், அரசியல் சட்ட பிரச்னையையும் உருவாக்கி விட்டது.
பாடலில் நேர்ந்த தவறு திட்டமிட்ட சம்பவம் என நினைத்த முதல்வர் ஸ்டாலின், அதற்கு காரணம் கவர்னர் ரவி தான் என தீர்மானித்து, அவசரமாக கண்டன அறிக்கை வெளியிட்டார்.
அதில் இடம் பெற்ற வாசகங்களால் அதிர்ச்சியான கவர்னர் ரவி விளக்கம் அளிக்க, முதல்வரின் அறிக்கையை பார்த்த அரசியல் தலைவர்கள் அவரவருக்கு தோன்றியதை பேட்டியாக அளித்தனர்.
அனைத்துக்கும் ஆன்டி-கிளைமாக்ஸாக துார்தர்ஷன், நடந்த தவறுக்கும் கவர்னருக்கும் சம்பந்தமும் இல்லை என்று கூறி மன்னிப்பு கேட்க, சில மணி நேரத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டது.
எல்லாரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த களேபரத்தில் அடங்கியுள்ளன. நடந்தது இது தான்:
துார்தர்ஷன் பொன் விழா மற்றும் ஹிந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழா, சென்னை துார்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அதில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. கலந்து கொண்டவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், நிகழ்ச்சி சுமுகமாக நடந்து முடிந்தது.
ஆனால், நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை ஏற்பாடு செய்தது தி.மு.க.,வின் மாணவர் அணி. சென்னை துார்தர்ஷனில் ஹிந்தி விழா கொண்டாடுவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் அது.
கொண்டாட்டம் ஒரு மாதமாக நடந்த போது கண்டுகொள்ளாதவர்கள், அதன் நிறைவு விழாவை ஆட்சேபிக்க என்ன காரணம் என்று யாரும் கேட்கவில்லை. ஆனால், நிகழ்ச்சி தகவல் அவர்களுக்கு தான் முதலில் கிடைத்தது.
தமிழகத்தில் ஹிந்தி விழா கொண்டாட கூடாது என, முதல்வர் ஸ்டாலின் அப்போது தான் அறிக்கை விட்டிருந்தார். அதற்கு பொருத்தமாக, தமிழ்த்தாய் வாழ்த்தில் வரி விடுபட்ட தகவல் கிடைத்ததால், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தவர்கள், அதை கமென்டால் ஊதி பெரிதாக்கி வீடியோ பதிவு வெளியிட்டனர். தனிப்பிரிவு புண்ணியத்தில், அது சட்டென வைரலானது. முதல்வர் உடனடியாக அறிக்கை விட்டார். கவர்னரை அதில் கடுமையாக விமர்சித்தார்.
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது, தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். ஹிந்தியை கொண்டாடும் போர்வையில், நாட்டின் ஒருமைப்பாட்டையும், இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் கவர்னர். அவர் ஆளுனரா அல்லது ஆரியரா?' என, முதல்வர் கேட்டார்.
அதோடு விடவில்லை. 'திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் கவர்னர் ரவி, தேசிய கீதத்தில் வரும் திராவிட என்ற வார்த்தையையும் நீக்கி விட்டு பாடச் சொல்வாரா?
தமிழகத்தையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் கவர்னர் ரவியை, மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்' என்றும் மத்திய அரசுக்கு ஸ்டாலின் அவசர கோரிக்கை விடுத்தார்.
அ.தி.மு.க., பழனிசாமி, காங்கிரஸ் செல்வபெருந்தகை, அ.ம.மு.க., தினகரன் என வரிசையில் வந்த ஏனைய கட்சி தலைவர்களும் கவர்னரை கண்டித்து அறிக்கை அல்லது பேட்டி அளித்தனர். சமூக ஊடகத்தில் வழக்கம் போல பொறிபறக்கும் வார்த்தை போர் பரவியது. கவர்னர் மாளிகை அதிர்ச்சியில் மூழ்கியது.
'பாடல் வரி விடுபட்டதற்கும், கவர்னருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, துார்தர்ஷனுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்' என, ராஜ்பவன் அதிகாரி திருஞானசம்பந்தம் தெரிவித்தார்.
அப்போது தான் துார்தர்ஷன் விளக்கம் வெளியானது. 'தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர், கவனக்குறைவாக ஒரு வரியை பாடாமல் விட்டு விட்டார். இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம். தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டுமென்றே இதை யாரும் செய்யவில்லை. இதனால், கவர்னருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அவரிடம் மன்னிப்பு கேட்கிறோம்' என்று தூர்தர்ஷன் தெரிவித்தது.
எனக்கு எதிராக இனவாத கருத்து: ஸ்டாலின் பற்றி கவர்னர் வேதனை
கவர்னர் ரவி அறிக்கை:முதல்வர் ஸ்டாலின், எனக்கு எதிராக இனவாத கருத்தை தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக, பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும், நான் தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும், அதை பக்தி சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும், அவருக்கு நன்றாக தெரியும்.
மத்திய அரசு, பல்வேறு அமைப்புகளை நிறுவி, தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரிய சிறப்பை உலகம் முழுவதும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் அறிவார். பிரதமர் மோடி ஐ.நா., சபைக்கும் தமிழை கொண்டு சென்றார். தமிழை பிற மாநிலங்களில் பரப்ப, நானும் ஏராளமான முயற்சிகளை எடுத்துள்ளேன். இதெல்லாம் நன்கு தெரிந்தும், என் மீது முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு கவர்னருக்கு எதிராக முதல்வர், இனவாத கருத்தை, தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமானது, மலிவானது. முதல்வர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளது. அவசர கதியில் என் மீது இனவாத கருத்தும் தவறான குற்றச்சாட்டும் கூறியதால், நானும் வெளிப்படையாக அதற்கு பதில் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.
நடந்தது இது தான்!
துார்தர்ஷனில் இசை, நாடகப்பிரிவு உண்டு. அதில், சசி என்பவர் அனுபவம் மிகுந்த பாடகி. முக்கிய நிகழ்ச்சிகளில் அவரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது வாடிக்கை. நேற்றைய நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கவில்லை. நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவின் ஊழியர்களே பாட பணிக்கப்பட்டனர்.
'லீட் சிங்கர்' எனப்படும், பிரதான பாடகரை பின்பற்றி, ஏனைய இருவர் பாடுவர். அவர் பாடல் வரிகள் அச்சிட்ட பேப்பரை நழுவ விட்டார். உடனே சுதாரித்தாலும், ஒரு வரியை தவற விட்டார். முரண்படக் கூடாதே என்று, மற்ற இருவரும் ஒத்துப்பாடினர். வெளியே தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், உள்ளே பலருக்கும் பதற்றம் இருந்தது குறிப்பிடத்தக்கது.