ஈஷா மையம் மீதான ஆட்கொணர்வு மனு: விசாரணையை முடித்து வைத்தது கோர்ட்
19 ஐப்பசி 2024 சனி 03:23 | பார்வைகள் : 1023
கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தன் இரு மகள்களை ஒப்படைக்கும்படி காமராஜ் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்து வைத்தது.
தமிழகத்தின் கோவையில் உள்ள தொண்டாமுத்துார் என்ற இடத்தில், சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சொந்தமான ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.
இங்கு தன் இரு மகள்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி துறவறம் மேற்கொள்ள வைத்துள்ளதாகவும், அவர்களை ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு வேளாண் பல்கலையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஈஷா ஆஸ்ரமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதை எதிர்த்து, ஈஷா அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
ஈஷா அறக்கட்டளை ஆஸ்ரமத்தில் விசாரணை நடத்த தமிழக போலீசுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கை தாங்களே விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தது.
ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக போலீசார் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதில், மனுதாரரின் இரு மகள்களும் பொறியியல் படிப்பில் முதுகலை படித்துள்ளதாகவும், உடல் மற்றும் மனதளவில் அவர்கள் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அவர்களாகவே விரும்பி தான் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதாகவும், துறவறம் மேற்கொள்ள வற்புறுத்தப்படவில்லை என தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்து வைத்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதால், நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கும் தமிழக போலீசின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்பதை உத்தரவில் தெளிவுபடுத்த கோரினார்.
இதை தொடர்ந்து, ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மட்டுமே முடித்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.