தேசிய கல்வி கொள்கையால் மாற்றம்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 ஐப்பசி 2024 வெள்ளி 03:08 | பார்வைகள் : 808
தேசிய கல்வி கொள்கையால், கல்வி மற்றும் கல்வித்துறையின் உள்கட்டமைப்புகள் நாளுக்கு நாள் மாறி வருகின்றன,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலையில் இந்திய பள்ளி உளவியல் சங்கம் மற்றும் பல்கலைக்கழகம் இணைந்து, நேற்று, 'பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள்' என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கை நடத்தின. கருத்தரங்கு, வரும், 26ம் தேதி வரை நடக்கிறது. கருத்தரங்கை, துவக்கி வைத்து மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
வரும், 2047ம் ஆண்டில், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. கடந்த, 2013ல், பொருளாதாரத்தில், 10வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல், 5வது இடத்தில் உள்ளது. வரும், 2027ல், பொருளாதாரத்தில், 3வது இடத்தை அடைய நாம் முன்னேறி வருகிறோம்.
கல்வித்துறையில், மத்திய அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. நாட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பத்தாண்டுகளில் புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கை வாயிலாக கல்வியும், கல்வித்துறையில் உள் கட்டமைப்புகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றன.
இந்திய இளைஞர்கள் சர்வதேச அளவில் போட்டி போட்டு வருகின்றனர். தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தலில், முக்கிய பங்கு வகிக்கும் பள்ளி உளவியல் வாயிலாக, ஒருங்கிணைந்த கல்வி சூழலை உறுதி செய்வதற்கான, முக்கியப்படியாக இந்த கருத்தரங்கு திகழ்கிறது.
மேலும், பன்முகத் தன்மை கொண்ட கல்வியை, மன ஆரோக்கிய முயற்சி மற்றும் வேலைவாய்ப்பு சந்தை தேவைகளுக்கு ஏற்ப, மாணவர்களை உருவாக்குவதையே, தேசிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பேசுகையில், ''மாணவர்களை உணர்வு பூர்வமாகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பள்ளி உளவியலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும், ஆசிரியர்கள் இரு பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
''மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது போல், அவர்களின் மன ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். தொழில் நுட்பம் வளர்ச்சி பெற்ற உலகில், இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த கருத்தரங்கு நடக்கிறது,'' என்றார்.