Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ., எதிர்பார்ப்பதை சீமான் செய்கிறார்: திருமாவளவன்

பா.ஜ., எதிர்பார்ப்பதை சீமான் செய்கிறார்: திருமாவளவன்

25 ஐப்பசி 2024 வெள்ளி 03:09 | பார்வைகள் : 254


விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், நேற்று அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது பழனிசாமியின் எதிர்பார்ப்பாகவும், வேட்கையாகவும் இருக்கலாம். அவரின் வேட்கை தணிய வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்.

கூட்டணி கட்சிகளுக்கு இடையில், பிரச்னையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது என, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து விட்டார். இதை, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வழிமொழிகிறது.

திராவிடம் வேறு; தமிழர் வேறு என விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங் பரிவார் அமைப்புக்கு துணை போவதாக அமையும். தமிழக கவர்னர் ரவி, ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் இதைத்தான் விரும்புகின்றனர்.

பா.ஜ., எதை எதிர்பார்க்கிறதோ, அதைத்தான் சீமான் செய்கிறார். சீமான் விவாதிப்பதெல்லாம் அப்படித்தான் இருக்கிறது. தி.மு.க., எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு.

திராவிடம் என்பது மரபினத்தை குறிக்கும் ஒரு சொல்; ஆரியம் என்பதற்கு நேர் எதிரான ஒரு கருத்தியல். ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றவர்களுக்கு முன்பே திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியவர் பண்டிதர் அயோத்திதாசர். தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர் என பாகுபடுத்தி சீமான் கூறுவது சரியான விவாதம் இல்லை; அது லாஜிக்கும் இல்லை.

திராவிடமும், தமிழர் என்பதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை; ஆனால், வெவ்வேறானவை. திராவிட இனம் என்பது தேசிய இனம் அல்ல மரபினம், தமிழ் என்பது மரபினம் அல்ல தேசிய இனம்.

தி.மு.க.,வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில், ஒட்டுமொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது இனவாதத்தில் தான் முடியும். மக்களை நாம் குழப்பக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்