இந்திய விமானங்களுக்கு 95 மிரட்டல்
25 ஐப்பசி 2024 வெள்ளி 03:10 | பார்வைகள் : 572
இண்டிகோ, ஏர் இந்தியா உட்பட 95 விமானங்களில் குண்டு வெடிக்கும் என நேற்றும் அனாமதேய மிரட்டல்கள் வந்தன. கடந்த 10 நாட்களில் மட்டும் 250 இந்திய விமானங்களுக்கு இவ்வாறு மிரட்டல் வந்துள்ளது. பெரும்பாலான மிரட்டல் தகவல்கள் எக்ஸ் வலைதளம் வாயிலாக வந்துள்ளதால், அதை முடக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருவதால், விமான நிலையங்களை பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
சர்வீஸ் ரத்து, தாமதம், தரையிறக்கம் போன்றவற்றால் விமான பயணியரும் சிரமத்தை சந்திக்கின்றனர். நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டமும், நாட்டுக்கு கெட்ட பெயரும் ஏற்படுகிறது.
வதந்தியாக இருந்தாலும், விமான போக்குவரத்து விதிகள்படி, எந்த மிரட்டலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
அது குறித்த வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதுவரை வந்த மிரட்டல்களில் பெரும்பாலானவை, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் எக்ஸ் வலைதள கணக்கை குறிப்பிட்டு பதிவானவை. இது குறித்து டில்லி போலீசார் எட்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறுகையில், ''விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு போட்டவர்களின் ஐ.பி., எனும் இணைய முகவரியை வைத்து, சைபர் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
''மிரட்டல் வெளிநாடுகளில் இருந்து வந்ததை போல முகவரி காட்டுகிறது. வி.பி.என்., எனப்படும் ஐ.பி., தகவல்களை மறைக்கும் நெட்வொர்க்கை பயன்படுத்தி மிரட்டல் விடுத்துஉள்ளனர்,'' என்றார்.
மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி நேற்று ஒரே நாளில் மட்டும் 95 விமானங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆகாசா நிறுவனத்தின் 25 விமானங்கள், ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா நிறுவனங்களின் தலா 20 விமானங்கள் மற்றும் ஸ்பைஸ்ஜெட், அலையன்ஸ் ஏர் நிறுவனங்களை சேர்ந்த தலா ஐந்து விமானங்களுக்கு நேற்று மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டது.
அந்த விமானங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு, சில மணிநேர தாமத்துக்கு பின் புறப்பட்டுச் சென்றன.
சமூக வலைதளங்கள் வாயிலாக விமானங்களுக்கு மிரட்டல் வருவதால், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் எக்ஸ் நிறுவனத்திடம், அந்த பதிவுகள் குறித்த தகவல்களை வழங்கும்படி மத்திய அரசு கேட்டுள்ளது. அவர்கள் தர மறுக்கின்றனர். குற்றம் புரிந்தவர்கள் குறித்த தகவலை தர மறுப்பது குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு சமம் என எடுத்துச் சொல்லியும் எக்ஸ் நிர்வாகம் மசியாததால், இந்தியாவில் அதை முடக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.