நியூசிலாந்தை நிலைகுலைய வைத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்
25 ஐப்பசி 2024 வெள்ளி 15:06 | பார்வைகள் : 740
புனேயில் நடந்து வரும் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேயில் நடந்து வருகிறது.
இந்திய அணி 156 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணி 103 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
முதல் இன்னிங்சில் பந்துவீச்சில் மிரட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar), இரண்டாவது இன்னிங்சிலும் மாயாஜாலம் காட்டினார்.
டெவோன் கான்வே 17 ஓட்டங்களில் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வில் யங் 23 ஓட்டங்களில் அஸ்வின் ஓவரில் வெளியேற, ரச்சின் ரவீந்திராவை (9) மிரட்டலான சுழலில் சுந்தர் போல்டாக்கினார்.
பின்னர் களமிறங்கிய டேர்ல் மிட்செல் 18 ஓட்டங்களில் இருந்தபோது சுந்தரின் ஓவரில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அரைசதம் விளாசிய அணித்தலைவர் டாம் லாதம் 86 ஓட்டங்களில் சுந்தரின் பந்துவீச்சில் lbw ஆனார். ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 198 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மேலும் 301 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.