Paristamil Navigation Paristamil advert login

இன்றே மாநாடு திடலுக்கு செல்கிறாரா விஜய்..? வெளியான தகவல்

இன்றே மாநாடு திடலுக்கு  செல்கிறாரா விஜய்..? வெளியான தகவல்

26 ஐப்பசி 2024 சனி 13:16 | பார்வைகள் : 152


தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை  நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை நடைபெறுகிறது.

மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 

இன்று மாலையுடன் அத்தனை பணிகளையும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முடித்து, தமிழக வெற்றிக் கழகத்தினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மாலை 4 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதாக மாநாட்டு மேடைக்கு வரும் விஜய் அங்கிருந்தபடி, ரிமோட் மூலமாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

கொடியேற்றிய பின், மாநாட்டு மேடையில் இருந்து தொண்டர்களை சந்திக்க, அங்கு சுமார் 600 மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள 'ரேம்ப்' (நடைபாதை) மீது நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்திய பிறகே மாநாட்டு மேடைக்கு வர உள்ளார். மாநாட்டின் தொடக்கமாக பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். 

இதனிடையே விஜய் மாநாட்டுக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். இது மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ரசிகர், ரசிகைகள், கட்சி தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு இன்று காலை வந்த வண்ணம் உள்ளனர். 

மேலும் மாநாட்டிற்காக கடந்த இருபது தினங்களுக்கு முன்பே விக்கிரவாண்டி, விழுப்புரம், கூட்டேரிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட விடுதிகளில் உள்ள அறைகளை மாநாட்டிற்கு வருபவர்கள் புக்கிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வரும் தொண்டர்கள் ரூம்கள் கிடைக்காமல் வி.சாலை பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். 

இதனிடையே தமிழக வெற்றிக் கழக தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில், மாநாட்டுக்கு மக்களை அழைத்து வரும் வாகனங்களை டாஸ்மாக் அருகே நிறுத்தக் கூடாது என்றும், மது அருந்திவிட்டு வருபவர்கள் மாநாட்டு பந்தலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலுக்கு இன்று இரவு வருவதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி விஜய், மாநாடு திடலுக்கு உள்ளே தங்குவதற்கு ஏற்ப கேரவன்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் அவர் தங்குவதற்கு ஏற்ப வி.ஐ.பி. ரூம் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்