சீனாவின் திட்டமும் அநுரவின் இலக்கும்
1 மார்கழி 2024 ஞாயிறு 14:36 | பார்வைகள் : 153
ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க பாராளுமன்றத்தில், கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய போது, 8 பில்லியன் டொலர்கள் சுற்றுலா பொருளாதாரத்தை உருவாக்குவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.
“சுற்றுலாத்துறையில் பெரும் பாய்ச்சலை செய்யக் கூடிய இயலுமை தொடர்பில் அறிந்துள்ளோம். அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க இருப்பதாக” அவர் தனது உரையில் கூறியிருந்தார்.
ஆனால் அதற்கான திட்டம் குறித்தோ, வழிமுறைகள் குறித்தோ அவர் வேறு எந்த விபரங்களையும் வெளியிட்டிருக்கவில்லை.
2018 ஆம் ஆண்டு, 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர் என்பதை மாத்திரம் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை ஒரே ஆண்டில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஆண்டு அது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் 2.3 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்த, இலங்கையினால் 4 மில்லியன், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது ஒன்றும் கடினம் அல்ல என்பதை அவர் உணர்த்த விரும்பியிருக்கலாம். ஆனால் ஜனாதிபதியின் இந்த இலக்கு இலகுவான ஒன்று அல்ல.
2019 ஆம் ஆண்டு 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய முதல் 3 மாதங்களில், 7.5 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர்.
ஆனால் அந்த ஆண்டில் சுமார் 1.9 மில்லியன் சுற்றுலா பயணிகளை தான் இலங்கைக்கு கொண்டு வர முடிந்தது. ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல், சுற்றுலா பயணிகளின் வருகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதனால், 2.5 மில்லியன் என்ற இலக்கை மாத்திரமல்ல, 2 மில்லியனாக குறைக்கப்பட்ட இலக்கை கூட எட்ட முடியவில்லை.
அதற்கு பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறை நிர்ணயித்த இலக்குகளை ஒருபோதும் தாண்டவில்லை.
2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, வெறுமனே 5 இலட்சம் சுற்றுலா பயணிகளை மாத்திரம் இலங்கையினால் ஈர்க்க முடிந்தது.
அடுத்த ஆண்டு , நிலைமை அதைவிட மோசமாகியது. இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, 2 இலட்சத்தை கூட தாண்டவில்லை.
2022 ஆம் ஆண்டு, சுற்றுலாத்துறை கொஞ்சம் தலை நிமிர, அரசுக்கு எதிரான போராட்டங்களும் பொருளாதார நெருக்கடிகளும், மீண்டும் சிக்கலை தோற்றுவித்தது.
அதனால், சுமார் 7 இலட்சம் பேர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.
2023 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை நிமிரத் தொடங்கியது. கிட்டத்தட்ட, 1.48 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டு 2.2 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து அரசாங்கம் பிரசாரங்களை முன்னெடுத்த போதும், அந்த இலக்கு எட்டப்படக் கூடிய சாத்தியம் தற்போது தென்படவில்லை.
இந்த ஆண்டில் இதுவரை 1.76 மில்லியன் சுற்றுலா பயணிகளே வருகை தந்திருக்கிறார்கள். டிசம்பர் மாதம் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கமாக அதிகரிக்கும் என்பதால், இந்த ஆண்டு இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2 மில்லியனை தொடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆனால், முன்னைய அரசாங்கம் நிர்ணயித்த 2.2 மில்லியன் என்ற இலக்கை எட்டக்கூடிய வாய்ப்பு இல்லை.
சுற்றுலா பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு இழுத்து வருவதில், அரசாங்கம் கடுமையான சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் தான், இந்த ஆண்டின் சுற்றுலா பயணிகள் வருகையை, இரண்டு மடங்காக அதிகரிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது.
4 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதன் மூலமாக, 8 பில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. இந்த இலக்கை அரசாங்கம் எப்படி எட்டப் போகிறது?
அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக சில ஊடகங்களில் ஒரு தகவல் வெளியாகியது. அநுரகுமார ஆட்சிக்கு வந்தால் சீனா, 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அனுப்ப தயாராக இருக்கிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இது ஒரு சாதாரண விடயம் அல்ல. ஏனென்றால், திடீரென 3 மில்லியன் சீனர்கள் இலங்கைக்கு வருகை தருகின்ற போது, அதனை சமாளிக்கின்ற திறன், உட்கட்டமைப்பு வசதிகள் இலங்கையிடம் இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரையில், சுற்றுலாத்துறை ஒரு முக்கிய வருமான மூலமாக இருந்தாலும், தற்போதுள்ள உட்கட்டமைப்புகள் திடீரென மில்லியன் கணக்கில் அதிகரிக்க கூடிய சுற்றுலா பயணிகளை சமாளிக்கக் கூடிய திறனை கொண்டிருப்பதாக தெரியவில்லை.
குறிப்பாக,விடுதி அறைகள் போதிய அளவில் இருக்க வேண்டும். அவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் இருக்க வேண்டும். பொழுதுபோக்கு இடங்கள் விரிவானவையாக இருக்க வேண்டும். உணவு வசதிகள் இருக்க வேண்டும்.
இப்படி பல உட்கட்டமைப்பு வாய்ப்புகள் இருந்தால் தான், பெருமளவில் சுற்றுலா பயணிகளை கையாளக் கூடிய திறனை இலங்கையினால் பெற முடியும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலக்கு வைத்திருக்கின்ற 4 மில்லியன் சுற்றுலா பயணிகள் திட்டமும் கூட, இத்தகைய சவாலுக்குரிய ஒன்றுதான்.
தற்போது இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை விட, இரண்டு மடங்கு பயணிகள் வருகின்ற போது, அவர்களை எதிர்கொள்வதற்கு தேவையான வசதிகள் இலங்கையில் இருக்கிறதா என்பது சந்தேகம்.
அதேவேளை, சீனா திடீரென பெருமளவில் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப முற்படுகின்ற போதும், சிக்கல்கள் ஏற்படும்.
இந்த ஆண்டில், ஜனவரி தொடக்கம் நவம்பர் 24 ஆம் திகதி வரையான காலகட்டம் வரை - இலங்கைக்கு வந்த சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 111, 476 மாத்திரமே ஆகும்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில், சீனா ஐந்தாவது இடத்திலேயே இருக்கிறது.
முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாம் இடத்தில் ரஷ்யாவும், மூன்றாம் இடத்தில் பிரித்தானியாவும், நான்காம் இடத்தில் ஜெர்மனியும் இருக்கின்றன.
இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில், கிட்டத்தட்ட 6 சதவீதம் தான் சீனர்கள். அப்படியிருக்க, திடீரென 3 மில்லியன் சீனர்கள் வந்து இறங்கும் போது நிலைமை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்வது கடினமானது.
அத்தகைய ஒரு திட்டம் சீனாவிடம் இருக்கிறதா என்று தெரியாவிட்டாலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம், 4 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டம் உள்ளது.
அவர்களை, சீனா உடனடியாக இலங்கைக்கு அனுப்புவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சீனா உலகில் மிகப்பெரிய சுற்றுலா பயணிகள் சந்தையை கொண்டிருக்கும் நாடு. 2019 ஆம் ஆண்டு சுமார் 154.6 மில்லியன் சீன சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தார்கள்.
பின்னர் இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இந்த ஆண்டில் இதுவரை 130 மில்லியன் சுற்றுலா பயணிகளை சீனா வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கிறது.
இவர்களில் ஒரு சிறு பகுதியினரை, இலங்கைக்கு அனுப்பினாலேயே, இலங்கை அரசாங்கத்தின் இலக்கை எட்ட முடியும்.
அந்த அடிப்படையில் தான், பெரும் எண்ணிக்கையான சீனர்களை இலங்கைக்கு அனுப்ப அனுப்புவது தொடர்பான. செய்திகள் வெளியாகின.
இலங்கையை பொருளாதாக நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு, குறிப்பாக, அநுரகுமார திசநாயக்க அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு, சீனாவிற்கு பல வழிகள் இருக்கின்றன.
நேரடியாக உதவிகளை செய்வது. ஏற்கனவே பெற்ற கடன்களை இரத்து செய்வது. அல்லது அதை அறவிடுவதை, பின் போடுவது. மறைமுகமாக உதவி செய்வது என பல வழிகள் இருக்கின்றன.
இதில் மறைமுகமாக செய்யப்படுகின்ற உதவிகளில் ஒன்றாக, சுற்றுலா பயணிகளை அனுப்புகின்ற திட்டத்தை குறிப்பிடலாம். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது இலங்கைக்கு பெரும் அனுகூலத்தை ஏற்படுத்தும்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற போது இலங்கையின் வருமானம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும். அது தற்போதைய அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு உதவும்.
அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்ட 4 மில்லியன் சுற்றுலா பயணிகள் திட்டமும் சரி, சீனா வைத்திருப்பதாக கூறப்படுகின்ற 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் திட்டமும் சரி, ஒன்றாக இருக்குமேயானால், வரும் நாட்களில் சுற்றுலா பொருளாதாரத்தை தீர்மானிக்கும் பிரதான பாராக சீனா மாறும்.
நன்றி வீரகேசரி