Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.,வில் திறமையானவர்களுக்கு வாய்ப்பில்லை: அண்ணாமலை காட்டம்

தி.மு.க.,வில் திறமையானவர்களுக்கு வாய்ப்பில்லை: அண்ணாமலை காட்டம்

2 மார்கழி 2024 திங்கள் 03:45 | பார்வைகள் : 741


நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால், திராவிட கட்சிகளின் ஓட்டுகள் மூன்றாக பிரிந்துள்ளன. பா.ஜ., ஓட்டுகள் அதிகரித்து இருப்பதால், 2026ல் சரித்திர தேர்தலாக இருக்கும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில், 'சர்வதேச அரசியல் புத்தாக்க' படிப்பிற்காக, ஆக., 28ம் தேதி லண்டன் சென்றார். மூன்று மாதம் படிப்பு முடிந்து, நேற்று தமிழகம் திரும்பினார்.

சென்னை விமானம் நிலையம் வந்தபோது, பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயப்படாது


பின், அண்ணாமலை அளித்த பேட்டி:

மூன்று மாதத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி, அரசியலில் கால் பதித்துள்ளார்; அவரை வரவேற்கிறோம்.

அவரது மாநாட்டில் நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறார்; கட்சி மாநாட்டுக்குப் பின் அமைதியாக இருக்கிறார்.

அவர், முழு நேர அரசியலுக்கு வரும் போது தான், விஜயின் அரசியல் குறித்து விமர்சிக்க முடியும். திராவிட கட்சிகளின் சித்தாந்தத்தை தான் விஜய் பேசுகிறார். அவரது கொள்கை கிட்டத்தட்ட திராவிட கட்சிகளின் கொள்கையோடு தான் ஒத்துப்போகிறது.

புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு பா.ஜ., எப்போதும் பயப்படாது. பெரிய அளவில் வசூல் செய்யும் படங்களில் நடிப்பவராக விஜய் உள்ளார். ஆனால், சினிமா மாதிரி அரசியல் களம் கிடையாது. அரசியல் களம் என்பது வேறு.

இன்றைய சூழலில், திராவிட கட்சிகளின் ஓட்டுகள் மூன்றாக பிரிந்திருக்கின்றன. பா.ஜ.,வின் ஓட்டுகள் அதிகரித்துஇருக்கின்றன.

உதயநிதி குறுகிய காலத்தில் எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார். தி.மு.க., எப்போதும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தது என்பதை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். அங்கு, திறமையானவர்களுக்கு வாய்ப்பில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.


 வலிமை


வருங்காலங்களில் உதயநிதியின் செயல்பாடு அடிப்படையில், அவரை பாராட்டுவதும், விமர்சிப்பதும் இருக்கும்.

லோக்சபா தேர்தலை விட, ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ., சரித்திரம் காணாத வெற்றியை பெற்றுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., வலிமையாக இருப்பதை காட்டுகிறது.

இந்தியாவில் தி.மு.க., ஆம் ஆத்மி கட்சிகள் வித்தியாசமான பாதையில் பயணிக்கின்றன. காந்தியைப் போல், செந்தில் பாலாஜியை முதல்வர் கொண்டாடுகிறார். இது தான், ஆம் ஆத்மியிலும் நடக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய பாதையில் பயணிக்கிறார். அவரது பாதையும், பா.ஜ., பாதையும் வேறு வேறு. இதுவரை இல்லாத அளவுக்கு, 2026 தேர்தல் புதிய களமாகவும், சரித்திரத் தேர்தலாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாக்கியமாக கருதுகிறேன்

'ஆக்ஸ்போர்டு பல்கலையில், அரசியல் மற்றும் சர்வதேச உறவு என்ற துறை சார்பில் நடத்தப்பட்ட கல்வி மற்றும் உதவி திட்டத்தில், மூன்று மாதம் படித்தேன். அங்கு படிக்கும் போது பெரிய உலகத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அரசியலை இன்னும் சிறப்பாக செய்வதற்கும், நம்மிடம் இருக்கும் குறைகளை சரி செய்வதற்கும், மூன்று மாத காலத்தை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.

இந்த படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்த பா.ஜ., மற்றும் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஹெச்.ராஜா உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

- அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்