மலை ரயிலை வாடகைக்கு எடுத்து வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
2 மார்கழி 2024 திங்கள் 03:47 | பார்வைகள் : 733
மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னுாருக்கு, 6 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, மலை ரயிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாடகைக்கு எடுத்து வந்தனர்.
மேட்டுப்பாளையம்- குன்னுார்- ஊட்டி இடையே இயக்கப்படும், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, 'யுனெஸ்கோ' அங்கீகாரம் பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய, சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், 'இங்கிலாந்தை சேர்ந்த, 12 பேர்; ஆஸ்திரேலியாவில் இருந்து இருவர்,' என, 14 சுற்றுலா பயணிகள், 6 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி நேற்று, மேட்டுப்பாளையம்- குன்னுார் வரை மலை ரயிலை தனியாக வாடகைக்கு எடுத்து வந்தனர்.
அவர்கள், நேற்று காலை, ஹில்குரோவ், ரன்னிமேடு மலை ரயில் நிலையங்களில் இறங்கி அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசித்து, ஆங்கிலேயர்கள் அமைத்த பாலங்கள் மற்றும் குகைகளில் மலை ரயில் செல்வதை 'வீடியோ' மற்றும் புகைப்படம் எடுத்தனர். நுாற்றாண்டு பழமை வாய்ந்த பாலங்களில் நடந்து சென்று மகிழ்ச்சி அடைந்தனர்.
சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை செய்த, 'டில்லி டிராவல் பால்ஸ்' இந்தியா நிறுவன இயக்குனர் அமீத் சோப்ரா கூறுகையில்,''ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட பழமை வாய்ந்த, என்.எம்.ஆர்., என அழைக்கப்படும், நீலகிரி மவுண்டன் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இவர்கள் வந்தனர்.
இதற்காக, மேட்டுப்பாளையம் முதல் குன்னுார் வரை, 6 லட்சம் ரூபாய் செலுத்தி ரயிலை எடுத்து வந்துள்ளோம். இந்த கட்டணத்தை குறைந்தால் மேலும் பல சுற்றுலா பயணிகளை அழைத்து வர வாய்ப்புள்ளது,'' என்றார்.