Paristamil Navigation Paristamil advert login

சாதகத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

சாதகத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

2 மார்கழி 2024 திங்கள் 03:51 | பார்வைகள் : 852


அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் நிலவரம் குறித்து பெரும்பாலும் சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துரைக்கிறது. திப்பு சுல்தான் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

வரலாற்று ஆய்வாளர் விக்ரம் சம்பத் எழுதிய, 'திப்பு சுல்தான்: தி சாகா ஆப் மைசூர் இன்டரெக்னம் 1761 - 1799' என்ற புத்தகத்தை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டில்லியில் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மாற்றுக் கண்ணோட்டங்கள் மற்றும் சமநிலையான கருத்துக்கள் தோன்றுவதற்கு ஊக்கமளித்துள்ளன.

நாம் ஓட்டு வங்கி சிறையில் சிக்கிக் கொள்ளவில்லை. மேலும், சங்கடத்துக்குரிய உண்மைகளை வெளிக்கொண்டு வருவது அரசியல் ரீதியாக தவறு அல்ல.

திறந்த மனதுடன் கூடிய புலமையும், உண்மையான விவாதமும் பன்மைத்துவ சமூகம் மற்றும் துடிப்பான ஜனநாயகம் உருவாக மையமாக உள்ளன.

திப்பு சுல்தானை பொறுத்தவரை இந்திய வரலாற்றில் அவர் ஒரு சிக்கலான மனிதர். ஒருபுறம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததில் முக்கிய நபராக அவர் புகழ் பெற்றார்.

இந்திய தீபகற்ப தலைவிதியைப் பொறுத்தவரை அவரது தோல்வியும், மரணமும் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படலாம் என்பது உண்மைதான். அதே நேரத்தில் அவர் பாதகமான உணர்வுகளை துாண்டியதாக மைசூரு, கூர்க் மற்றும் மலபாரின் சில பகுதிகளில் கருதப்படுகிறது.

சமகால வரலாறு என்பது நல்லனவற்றை கூறுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; அதேநேரம் பாதகங்களையும் தவிர்க்க தவறுவதில்லை.

அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் நிலவரம் குறித்து பெரும்பாலும் சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துரைக்கிறது. திப்பு சுல்தான் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது.

இந்த புத்தகம் திப்பு சுல்தான் பற்றிய உண்மைகளை பேசுவதோடு, வாசகர்களின் சொந்த முடிவுக்கும் இடம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்