Paristamil Navigation Paristamil advert login

மேற்கு வங்க அரசுக்கு ஜார்க்கண்ட் கடும் எதிர்ப்பு

மேற்கு வங்க அரசுக்கு ஜார்க்கண்ட் கடும் எதிர்ப்பு

2 மார்கழி 2024 திங்கள் 03:52 | பார்வைகள் : 777


மேற்கு வங்கத்தில் விலையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கை விற்பனை செய்ய, அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட், வினியோகத்தை உடனடியாக தொடரும்படி கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக உருளைக்கிழங்கின் விலை அதிகரித்தபடி உள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு, 35 - 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கட்டுப்பாடு

உள்ளூர் சந்தையில் விலையை கட்டுப்படுத்த, அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கை விற்பனை செய்ய, சில கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்தது.

மாநில எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்திய அதிகாரிகள், உருளைக்கிழங்கை ஏற்றி வரும் லாரிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ஜார்க்கண்டின் உருளைக்கிழங்கு தேவையை, அதன் அண்டை மாநிலமான மேற்கு வங்கம் 60 சதவீதம் பூர்த்தி செய்கிறது. தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஜார்க்கண்டில் உருளைக்கிழங்குக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது.

கடந்த இரு நாட்களில், ஜார்க்கண்டின் சில்லரை சந்தைகளில் உருளைக்கிழங்கின் விலை, கிலோவுக்கு 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

ஜார்க்கண்டிற்கு உருளைக்கிழங்கு வினியோகத்தை மேற்கு வங்க அரசு நிறுத்தியதை அறிந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், இது குறித்து மேற்கு வங்க அரசுடன் உடனடியாக பேசி தீர்வு காணும்படி, தலைமை செயலர் அல்கா திவாரிக்கு உத்தரவிட்டார்.

இதன்படி, மேற்கு வங்க தலைமை செயலர் மனோஜ் பந்துடன், தொலைபேசியில் ஜார்க்கண்ட் தலைமை செயலர் அல்கா திவாரி பேசினார். அப்போது, உருளைக்கிழங்கு வினியோக பிரச்னைக்கு தீர்வு காண, விரைவில் ஒரு குழு அமைக்கப்படும் என, அவரிடம் மனோஜ் பந்த் உறுதி அளித்தார்.

நஷ்டம்

மேற்கு வங்க உருளைக்கிழங்கு வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஆலோசகருமான பிபாஸ் குமார் தே கூறுகையில், ''மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு வினியோகத்தை தடுக்க, எல்லையில் மேற்கு வங்க அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக, உருளைக்கிழங்கு ஏற்றிய லாரிகளை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

''இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த கட்டுப்பாடுகளை திரும்பப் பெறும்படி, மேற்கு வங்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டால், இன்று இரவு முதல் குளிர்பதனக் கிடங்குகளில் இருந்து உருளைக்கிழங்கை எடுக்க மாட்டோம்,'' என்றார்.

நாளை முதல் வேலைநிறுத்தம்

மேற்கு வங்க உருளைக்கிழங்கு வியாபாரிகள் சங்க செயலர் லாலு முகர்ஜி நேற்று கூறியதாவது:மேற்கு வங்க அரசின் திடீர் நடவடிக்கை, எங்கள் வியாபாரத்தை பாதித்துள்ளது. பல வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய கட்டுப்பாடுகளை நீக்காவிட்டால், நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்