Paristamil Navigation Paristamil advert login

வென்ற நடிகர் அரசியலுக்கு வந்தார்; தோற்ற நடிகர் துணை முதல்வரானார்: அண்ணாமலை பேச்சு

வென்ற நடிகர் அரசியலுக்கு வந்தார்; தோற்ற நடிகர் துணை முதல்வரானார்: அண்ணாமலை பேச்சு

2 மார்கழி 2024 திங்கள் 03:57 | பார்வைகள் : 1003


நான் வெளிநாடு சென்றிருந்த போது வெற்றியடைந்த நடிகர் அரசியலுக்கு வந்தார். தோல்வியடைந்த நடிகர் துணை முதல்வர் ஆனார்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

முதல் கூட்டம்

சர்வதேச அரசியல் தொடர்பான உயர்படிப்பு படிப்பதற்காக 3 மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை., சென்ற அண்ணாமலை இன்று தமிழகம் திரும்பினார்.


தொடர்ந்து, கோவை வந்த அவர், கொடிசியா வளாகத்தில் 'விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு ' என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அண்ணாமலை முதல்முறையாக பங்கேற்றார்.

முதலிடம்


இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:

உலகத்தின் அரசியல் பார்வை மிக முக்கியமானது. நாம் எங்கு இருந்தாலும் உலகத்தில் நடக்கும் ஒரு விஷயம் நம்மிடம் தாக்கம் ஏற்படுத்தும். அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் சமூக வலைதளத்தில் நிறைய விஷயம் பேசுகிறார். பிரிக்ஸ் நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு வரி விதிக்க போவதாக கூறுகிறார். அரசு இயந்திரத்தையே குறைக்க போகிறேன் என்கிறார். முதல் நாள் சட்டவிரோதமாக குடியேறிய 1.2 கோடி அகதிகளை வெளியேற்ற போகிறேன் என்கிறார்.

மறுபுறம் இங்கிலாந்து தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இ்ங்கிலாந்துக்கு ஆண்டுதோறும் 3 லட்சம் இந்தியர்கள் செல்கின்றனர். அவர்களது விசா நடவடிக்கைகளால் நமக்கு பாதிப்பு உள்ளது.

அமெரிக்காவில் அதிகம் படிக்கும் மாணவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். பிரிட்டனிலும் இந்தியர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். ஆஸி.,யிலும் நாம் தாம் முதலிடத்தில் உள்ளோம். உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் இந்தியர்கள் உள்ளனர்.

அங்கு காபிக் கடை, ஷூக்கடைகள் என அனைத்து இடங்களிலும் பகுதி நேரமாக இந்தியர்கள் வேலை பார்க்கின்றனர். வளர்ந்த நாடுகளில் தூதராக, கலாசார தூதராக உள்ளனர். பிரிட்டன் உள்ளாட்சி தேர்தலில் தமிழர்கள் வெற்றி பெறுகின்றனர். அனைத்து நாடுகளிலும் இது நடக்கிறது. அதிக பணக்கார இந்தியர்கள் கடந்த ஆண்டு வெளிநாட்டில் குடியுரிமை எடுத்து உள்ளனர்.

மோடி உதாரணம்

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கு மட்டும் தான் உரிமை என டிரம்ப் கூறுகிறார்.ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் முதல் உரிமை எங்களுக்கு தான் என்ற அரசியலை முன் எடுத்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இங்குள்ள அரசியல், செயல்திறனுக்கான அரசியல். இதற்கு மோடி தான் சிறந்த உதாரணம்.

ஹரியானாவிலும், மஹாராஷ்டிராவிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். வேலை செய்கிறார் தொடர்ந்து வெற்றி பெறுகிறார். ஜனநாயகத்தில் இத்தனை வெற்றி பெற்ற ஒரு தலைவரை நாம் பார்த்தது கிடையாது. ஏனென்றால், ஒரு கட்டத்தில் அதன் மீதான சுவாரசியம் மக்களுக்கு போய் விடும். குஜராத் போன்று ஐந்து முறை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது. ஜனநாயகத்தில் செயல்திறனுக்கான அரசியலில் வெற்றி பெறக்கூடிய ஒரே தலைவர்.

மறுபக்கம் சமரச அரசியலில் ஈடுபடும் கட்சி; குடும்ப அரசியல் வைத்துக் கொண்டு கட்சி, ஒருபக்கம் வேலையே செய்யாமல் தேர்தலின் போது பணம் கொடுத்து வெற்றி பெறும் இயக்கம். இந்த நான்கும் கூட நம் முன் உள்ளே அரசியல். ஒரு கட்சி, ஆட்சி இந்த நான்கில் ஏதாவது ஒன்றை துருப்புச்சீட்டாக கையில் எடுத்து மக்கள் மன்றத்தில் வைத்து, திட்டமாக கொண்டு சென்று வெற்றி பெறுகின்றனர். இதில் எது நல்லது என்பது முக்கியமானது,

மகளிருக்கு நிதி

* 2020 அக்., முதல் அசாமில் 37 லட்சம் பெண்களுக்கு மாதம் 830 ரூபாய் பா.ஜ., அரசு வழங்குகிறது. தி.மு.க., கொடுப்பதற்கு முன்பு அசாமில் வழங்கப்பட்டு வருகிறது.

* பா.ஜ., ஆளும் ம.பி.,யில் 2023 மார்ச் முதல் 1.29 கோடி பெண்களுக்கு மாதம் 1,250 ரூபாய் கொடுக்கின்றனர்.

*2024 மார்ச் முதல் பா.ஜ., ஆளும் சத்தீஸ்கரில் 70 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர்.

* 2024 ஜூலை முதல் மஹாராஷ்டிராவில் 1.70 கோடி பெண்களுக்கு 1,500 ரூபாய் பா.ஜ., ஆட்சியில் வழங்கப்படுகிறது.

*2024 செப்., முதல் ஒடிசாவில் 80 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

பா.ஜ., நோக்கம்

மோடி ஆட்சியை கவனித்தால், 40 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு துவங்கப்பட்டது. ஒவ்வொரு கணக்கிலும் ரூ.1,500 கோவிட் காலத்தில் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும். 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு, 18 கோடி விவசாயிகளுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பா.ஜ., ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம்.

அரசியல் கட்சிகள் மைய கோட்டில் நின்று பார்த்து கொண்டு உள்ளோம். அனைத்தையும் இலவசமாக கொண்டு சென்றால் என்ன ஆகும்? எதுவும் இலவசம் அல்ல என்றால் என்னாகும் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த கட்டத்தில் இந்திய அரசியல் உள்ளது. ராகுல் , இதை தாண்டி , அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல பார்க்கிறார். அனைத்தையும் இலவசமாக கொடுக்க முயற்சி செய்கிறோம். நாட்டில் வளர்ச்சி இல்லை என்றாலும் கூட அதனை கண்டு கொள்ளாதீர்கள் என்று அவர் சொல்கிறார்.

எம்.எஸ்.பி.,

அனைத்து விவசாய பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலை கொண்டு வந்தால் அதற்கு ரூ.60 லட்சம் கோடி தேவை. ஆனால், இன்றைக்கு, 23 விவசாய பொருட்களுக்கு எம்.எஸ்.பி., உள்ளது. அதற்கு ரூ.15 - 18 லட்சம் கோடி உள்ளது.

திமுக., மேடையில், ஸ்டாலின் கைகளில் பேப்பர் ஒன்று இருக்கும்.மத்திய அரசை திட்டி, வடக்கு தெற்கு என சொல்லி, ஹிந்தி திணிப்பு, எல்.ஐ.சி.,யில் யாரோ ஒருவர் ஹிந்தி கடிதம் எழுதியது, நாமே கையெழுத்து போட்டு விட்டு, நாமே இல்லை என சொல்லலாமா என ஐந்து விஷயங்கள் இருக்கும்.

அடுத்து இந்த பக்கம், இவர்களை சரி செய்வதற்கு இதையெல்லாம் செய்துவிட்டேனா, செய்துவிட்டேனா. இவன திட்டு… அவன திட்டு… என்பது இது ஒரு விதமான அரசியல்.

கிடையாது

அரசியல் கட்சிகளை சாராதவர்கள் அமரும் மேடையில் கட்சியினர் பேசுவது தேர்தல் திட்டமாக மாறும் நிகழ்வு சில காலங்களில் நடக்கும். நடக்கும் அரசியல் எப்படி நடக்கிறது என நாம் சிந்திக்க வேண்டும். 3 லட்சம் கோடி தமிழக அரசின் பட்ஜெட்டில் பணம் எங்கு, எங்கு செல்கிறது. உள்கட்டமைப்பு உள்ளதா?.பெண்கள், குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள் உள்ளதா? ஆரம்பக் கல்வி சிறப்பானதாக உள்ளதா? சுத்தமான சுகாதாரம் கூடிய மருத்துவ வசதிகள் உள்ளதா?இதை எல்லாம் பேசக்கூடிய கேள்விகளாக இருக்க வேண்டும்.ஆனால், இவை அனைத்தும் தமிழக அரசியலில் கிடையாது.

விஜய் அரசியல்

நான் 3 மாத காலம் வெளியே படிக்க சென்றிருந்த போது, வெற்றிகரமான நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார். தோல்வியடைந்த நடிகர் துணை முதல்வர் ஆகிவிட்டார். பத்திரிகையாளர்கள் கேட்கும் முதல் கேள்வி சினிமாவை சுற்றி உள்ளது. இதனால், சாமானிய மக்களுக்கு இதனால் எந்த பிரயோஜனம் கிடையாது. சாமானிய மக்களுக்கு புரட்சிகர அரசியலை கொண்டு வர வேண்டும். விஜய் அரசியலை வரவேற்கிறேன். வர வேண்டும். உச்சத்தில் இருக்கும் அவரது படத்தை அனைவரும் பார்த்து உள்ளனர். ரசித்துள்ளனர். அரசியல் களமாட வேண்டும்.

உதயநிதி பதவியேற்றதை விமர்சிக்கவில்லை. அவரது கட்சி யாரை கொண்டு வருவதற்கும் உரிமை உண்டு.

இறக்குமதி

மக்களுக்கு பயன்படும் அரசியலை யாரும் பேசுவது கிடையாது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால், காப்பரை ஏற்றுமதி செய்த நாடு, இன்று அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு வந்துள்ளது என்ற செய்தி எத்தனை தமிழக ஊடகத்தில் வந்துள்ளது. அந்த நிறுவனத்தை மூடியதால், இந்தியா, மேலை நாட்டில் இருந்து காப்பர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. புவி அரசியலில் இந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல் என்ன என்பதை சாமானிய மக்கள் புரிந்து கொண்டால், இதை வைத்து அரசியல் செய்ய முடியாது.

டங்ஸ்டன்

அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே தவிர, அதை ஆக்கப்பூர்வமான முறையில் மக்கள் முன் வைத்து இதில் 10 சரி உள்ளது. 5 தவறு உள்ளது. இது வேண்டுமா என கேட்கும் அரசியல் நம்மிடம் இல்லை. டங்ஸ்டன் மதுரையில் எடுத்தால் கண்டிப்பாக 10 பிரச்னைகள் உள்ளது. அதை இல்லை என சொல்லவில்லை. மக்கள் வெளியே போக வேண்டும். அந்த 20 சதுர கி.மீ, இடத்தில் டங்ஸ்டன் எடுக்கவேண்டும். அந்த முக்கியமான தாதுப்பொருள் வேண்டும்.

அதில் நல்லதும் உள்ளது. அதற்காக யாரிடமும் சார்ந்து இருக்க வேண்டி இருக்காது. இதை பக்குவமாக, எடுத்து செல்லக்கூடிய அரசியல்வாதிகள் கிடையாது. நல்லது உள்ளது. கெட்டது உள்ளது. இதை மக்கள் முன் எடுத்துச் சொல்லுங்கள். பிறகு கிராம சபையை கூட்டுங்கள். பிரச்னை ஆனாலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. சுகாதாரம் கிடைக்கிறது. எவ்வளவு கிடைக்கிறது என சொல்ல வேண்டும்.

மத்திய அரசு விளக்கம்

இங்கு, ஒரே வார்த்தை எதிர்ப்பு. இந்த அரசியல் எப்போது மாறும் என்றால், சாமானிய மக்கள் குரலை உயர்த்தி கேட்க வேண்டும். இந்த அரசியலால் லாபம் என்ன நஷ்டம் என்ன என கேட்க வேண்டும். அது கேட்காத வரையில் எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு அரசியல் நடக்கும். இதற்காக மத்திய அரசு விளக்கம் கொடுத்து உள்ளது.

'2024 பிப்., டங்ஸ்டனுக்காக டெண்டர் கொண்டு வந்தோம். மாநில அரசிடம் கேட்டோம். மாநில அரசு கருத்து சொன்னாங்க. எங்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. டெண்டர் போட்ட பிறகு, நிறுவனம் எடுத்தாச்சு.

நவ.,ல் 10 மாதம் கழித்து, தமிழக அரசு எதிர்ப்பு சொல்லாமல், முதல்வர் கடிதம் எழுதுகிறார்' எனக் கூறியுள்ளது. இதனைத்தான் எதிர்க்கிறோம். பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது மட்டும் தான் எதிர்க்கிறோம். பிரச்னையாக இருந்தால் முதலில் சொல்லுங்கள்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நான் கையெழுத்து போட்டேன். ஆனால். தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என 10 ஆண்டுகள் பிறகு சொல்லாதீர்கள்.

அதன் பிறகு பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள் டில்லி சென்று சண்டையிட்டு தடுத்து நிறுத்த வேண்டிய சூழல் எங்களுக்கு வந்துள்ளது. டெண்டர் வழங்கியது நீங்கள்.

அரசியல்வாதிகள் கிடையாது

கண்டிப்பாக எதிலும் 100 சதவீதம் லாபமும் கிடையாது. நஷ்டமும் கிடையாது. தொழிற்சாலை வந்தால் பிரச்னை தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுச்சூழல் கெடும். வேலைவாய்ப்பும் வேண்டும். சுற்றுச்சூழலும் கெடக்கூடாது. மக்களும் அந்த இடத்தை விட்டு போகக்கூடாது என பேசக்கூடிய அரசியல்வாதிகள் நம்மிடம் உள்ளனரா கிடையாது.

அனைவருக்கும் வாய்ப்பு

இந்த மேடையில், அனைத்து சித்தாந்தங்களையும் பேசக்கூடியவர்களை பேச வைக்க வேண்டும். ஒரு அரசியல்வாதி. நான் ஐந்து பெருமாள் கோவிலை இடித்தேன் என சொல்கிறவரை பேச வையுங்கள்.

தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், அறநிலையத்துறை என்பதுஇருக்காது என சொல்கிறோம். எங்களிடமும் கேளுங்கள். அப்படி அறநிலையத்துறை இல்லை. அதற்கான சட்டம் இல்லை என்றால், என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேளுங்கள். அதற்கு பதில் சொல்வது எங்கள் கடமை.

இரண்டையும் பேசாமல் மையத்தில் சுற்றுகிறார்கள். இந்த சித்தாந்தத்தில் கொஞ்சம், மற்ற சித்தாந்தத்தில் கொஞ்சம் எனவும், 10 தலைவர்கள் போட்டால் நம்மை விமர்சனம் செய்யமாட்டார்கள் என நினைக்கும் கட்சிகள் உள்ளன. அவர்களிடமும் கேளுங்கள்.

எதிர்ப்பு

அனைத்திலும் எதிர்ப்பு எதிர்ப்பு சொல்லி என்ன ஆனது. வெட் கிரைண்டர் நகராக கோவை இருந்தது. தற்போது ஆமதாபாத் மாறி உள்ளது. எங்கு கோட்டை விட்டோம். ஏன் கோட்டை விட்டோம். ஏன் குஜராத், கோவை பெயரை எடுத்துள்ளது. எந்த கொள்கையில் தவறு செய்தது என அரசியல்வாதிகளிடம் கேள்வி கேளுங்கள். கல் எடுக்கக்கூடாது என சட்டம் போடுவோம். அப்புறம் எப்படி கிரைண்டர் செய்ய முடியும்?

கோவை வளர்கிறதா

வளரும் நகராக கோவை உள்ளதா? நிச்சயம் கிடையாது. கோவை வளர வில்லை. விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்க ஏன் தாமதம். பா.ஜ., ஆட்சி வரும்போது 71 விமான நிலையங்கள் இருந்தது. பிறகு 151 வந்தது. கோவையில் மாதிரி ரயில் நிலையம் வர உள்ளது. கோவைக்கு இவ்வளவு தாமதம் வர வேண்டிய காரணம் என்ன?

இன்றைக்கு சில அறிவாளிகளை கூட அடிமைவாதிகளாக மாற்றக்கூடிய அரசியல் இருககிறது. அறிவாளிகள் கூட அடிமைகளாக இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை வந்துள்ளது. பி.டி.ஆர்.,ஐயும், உதயநிதியையும் தராசு தட்டில் வைத்து எடை போட்டு பாருங்கள்.

அமெரிக்காவில் படித்து, உழைத்து வெற்றி பெற்று அரசியலுக்கு வருவார்கள். 90 சதவீதம் இப்படி தான் நடக்கும். தமிழகத்தில் பொய் சொல்ல வேண்டும். ஜால்ரா போடவேண்டும். இதை மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.இன்றைய அரசியல் அறிவாளிகளை கூட அடிமைவாதிகளாக மாற்றினால், எங்கு போய் நிற்கும்?

போராட்டம்

ஒரு தொழிலதிபர் அரசியல்வாதி அவதாரம் எடுக்க முடியாது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்களை பந்தாடிவிடுவார்கள். சில பேர் மட்டும் எடுக்கின்றனர். கீழ்த்தட்டு மக்களுக்கு அரசியல் அதிகாரம் சென்றடையவில்லை. அவர்களுக்காக தான் இந்த போராட்டம் நடக்கிறது. அவர்களுக்கு ஒரு காலம் வரும். படிப்பை விட அரசியல் அதிகாரம் செல்லும் போதுதான் விடிவு ஏற்படும் என அம்பேத்கர் சொல்லி உள்ளார். இதை நடுத்தர மக்கள் தான் செய்ய வேண்டும்.

கலாசாரம்

பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒன்றில் 67 லட்சம் பொருட்கள் வைத்து உள்ளனர். அதில், டைனோசர் எலும்புக்கூடு முதல் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டது வரை உள்ளது.

ஆக்ஸ்போர்டு 20 லட்சம் பொருட்கள் உள்ளது. நாகா பழங்குடியினரின் மண்டை ஒடு ஒரு அருங்காட்சியகத்தில் உள்ளது. கிளைவ் அருங்காட்சியகத்தில் 46 ஆயிரம் பொருட்கள் உள்ளது.

நம்முடைய பாரம்பரியம் உலகம் முழுதும் சிதறி கிடக்கிறது. நம்முடைய விநாயகர் சிலை சிலரின் வீடுகளில் அலங்கார பொருட்களாக உள்ளது.

இன்று மிக முக்கியமான விஷயம், நம்முடைய கலாசாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அதனை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் வேரினை கொண்டு வர வேண்டும்.இதனை மோடி செய்து கொண்டு உள்ளார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவிற்கு சொந்தமான 640 கலாசார பொருட்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.முந்தைய ஆட்சியாளர்கள் 4 கலாசார பொருட்களை மட்டுமே கொண்டு வந்துள்ளனர். ஆனால், லட்சக்கணக்கான பொருட்கள் வெளிநாட்டில் உள்ளது.

பிரிட்டனில் இருந்து எதையும் கொண்டு வர முடியாது. அங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள், இங்கிருந்து திருடப்பட்டவை என நிரூபணம் செய்தாலும் அதை கொடுக்க மாட்டார்கள். பிரிட்டனில் இருந்து 11 பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அதை, பிரதமரின் செல்வாக்கு மூலம் நடந்தது.

அறிவு சார்ந்தது

இன்று உலகின் பழமையான பல்கலை., ஆக்ஸ்போர்டு. சிறந்த பல்கலை ஆக்ஸ்போர்டு. அனைத்தும் அங்கு முடிவு செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள பல்கலை.,கள் அறிவுக்களஞ்சியங்களாக மாறிவிட்டன. உலகளவில் சிறந்த பல்கலை.,களில் இந்திய பல்கலை.,யும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

நாம் பயன்படுத்தும் சைக்கிள், உணவு, கோவிட், புற்றுநோய் மருந்து அமெரிக்கா, பிரிட்டன் பல்கலை.,கள் முடிவு செய்கின்றன. அறிவுசார்ந்த நாட்டை நாம் கட்டமைக்க வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும். நாம் வேலை செய்வது அறிவு சார்ந்ததாக இருக்க வேண்டும். இதனை நடுத்தர மக்கள் முடிவு செய்ய வேண்டும் அறிவுசார்ந்த நாடு கட்டமைத்தால் மட்டுமே 2047ல் வளர்ச்சியடைந்த நாடாக இருக்க முடியும்.

வலிமை

நாங்கள் வாழ்வதற்கு என்ன கொடுத்தீர்கள் என அரசியல்வாதிகளுக்கு நிர்பந்தம் வையுங்கள். இதனையும் சாமானிய மக்கள் தான் செய்ய முடியும். தமிழக அரசியலை மாற்றக்கூடிய வலிமை உங்கள் கைக்கு மட்டுமல்லாமல் வாய்க்கு உள்ளது.

ஓட்டுப்போடக்கூடிய மக்களின் வாய்களின் வலிமை அரசியல்வாதிகளுக்கு தெரியாது. ஓட்டுபோட்ட பிறகு நீங்கள் பேச வேண்டும். இதுபோன்ற கூட்டங்களில் தைரியமாக பேசுங்கள். விமர்சனம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் தான் திறமையான விலங்குகள். மக்கள் சிந்திப்பதை கண்டுபிடித்து விடுவார்கள். பெரியவர்களுக்காக நடைபாதை, பூங்கா, சமுதாயம் கிடையாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு நகரில் இடம் கிடையாது.

மெட்ரோ

சென்னை மெட்ரோவுக்கு அனுமதி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினேன். மத்திய அரசு செய்யும். அதனை மாநில அரசு உரிமை கொண்டாடும். நீங்கள் ஏன் எழுதினீர்கள் என கேட்டனர். எங்களுக்கு சரி என பட்டது. மோடி நிதி ஒதுக்கினார். கோவைக்கும் அதை செய்யப்போகிறோம். நிச்சயம் அது நடக்கும். எங்களை கட்டாயப்படுத்துங்கள். அதனை செய்யுங்கள். இங்கு எந்த கட்சியை காயப்படுத்தி இருந்தால், மன்னித்துவிடுங்கள். பேச வேண்டியது எனது கடமை.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்