சாத்தனூர் அணை சரியாக தூர் வாராததே பாதிப்புக்கு காரணம்! அண்ணாமலை குற்றச்சாட்டு
3 மார்கழி 2024 செவ்வாய் 07:55 | பார்வைகள் : 766
சாத்தனூர் அணையை சரியாக தூர் வாராததே மழை, வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பெஞ்சல் புயலால் உப்பளத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்ற தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமாலை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, உப்பளத் தொழிலாளர்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது; வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை மையம் கூறி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆறுகளை முறையாக தூர் வாராததே வெள்ள பாதிப்புக்கு காரணம்.
நாங்கள் இங்கு வந்ததன் நோக்கம், நிலைமை எப்படி உள்ளது என்பதை தெரிவிப்பது தான். மத்திய அரசிடம் பணம் கேட்டோம், தர வில்லை என்று பழிபோடுவார்கள்.
பொதுவாகவே, இதுபோன்ற தருணங்களில் ஒருவாரத்தில் மத்தியக் குழுவினர் வருவார்கள். இது ஒரு நடைமுறைதான். அவர்கள் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடுவார்கள். அதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு தொகை தரலாம். நிச்சயம் மத்திய அரசின் தரப்பில் இருந்து இழப்பீடு வழங்கப்படும்.
சாத்தனூர் அணை திறப்பின் போது, மாநில அரசு 5 முறை அலர்ட் கொடுத்து உள்ளோம் என்று கூறுகிறது. 1 மணிநேரம் முன்பு சொல்லி விட்டு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். மக்கள் எப்படி வெளியேற முடியும். 38 கிராமங்கள் மூழ்கிவிட்டன.
சாத்தனூர் அணையை சரியாக தூர் வாராததே காரணம். அரசு இயந்திரம், குறிப்பாக மாநில அரசு சரியாக செயல்படவில்லை. இந்த எச்சரிக்கை என்பது துறைகளுக்குள்ளாக மட்டுமே தெரியபடுத்தி உள்ளனர். அதிகாலை 2 மணிக்கு அறிவிப்பு தந்ததால் மக்கள் வெளியேற முடியவில்லை.
செந்தில் பாலாஜி பெயிலில் வந்த பின்னர் அமைச்சராக பொறுப்பேற்றதை சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டி உள்ளது. அவர்கள் எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் தப்பித்து விடலாம். மக்கள் மன்றத்தில் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.