அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு; விழுப்புரம் மக்கள் கொந்தளிப்பு
3 மார்கழி 2024 செவ்வாய் 07:58 | பார்வைகள் : 1008
விழுப்புரம் இருவேல்பட்டு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தச் சென்ற போது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசி கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
பெஞ்சல் புயல் காரணமாக, விழுப்புரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. திண்டிவனம் அடுத்த மயிலத்தில், வரலாறு காணாத வகையில், 51 செ.மீ., மழை பெய்தது. ஏரி உடைந்ததால், திண்டிவனம் நகரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டனர். மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (டிச.,03) புயல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கவும், அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர், வனத்துறை அமைச்சருடன் விழுப்புரம் சென்றார். இருவேல்பட்டு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசி கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொன்முடி வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்து இருந்தார். உடனே காரில் பொன்முடி புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.