SK 25 படப்பிடிப்பில் இருந்து கோபத்தில் வெளியேறிய சிவா!
3 மார்கழி 2024 செவ்வாய் 14:19 | பார்வைகள் : 517
தமிழ் சினிமாவின் அடுத்த தளபதியாக கொண்டாடப்படுபவர் சிவகார்த்திகேயன். இதற்கு காரணம் அவர் நடித்த அமரன் படத்தின் அதிரி புதிரியான வெற்றி தான். இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டதோடு பாக்ஸ் ஆபிஸீல் ரூ.300 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்து இருக்கிறார்.
அவர் கைவசம் தற்போது மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அதில் எஸ்.கே.23 திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்தபடியாக அவர் நடிக்க உள்ள எஸ்.கே.24 திரைப்படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இதுதவிர சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை சூரரைப்போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக கூறப்பட்டது.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே.25 என பெயரிடப்பட்டுள்ளதோடு இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவும், வில்லனாக ஜெயம் ரவியும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதோடு இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்றும், ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
முன்னதாக எஸ்.கே.25 திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட்டை இன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் எஸ்.கே.25 படத்தின் டெஸ்ட் ஷூட் கேன்சல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் தாடியுடன் இருந்ததால் அதை சுதா எடுக்க சொன்னதாகவும் அதற்கு சிவா மறுத்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பாதியிலேயே சிவகார்த்திகேயன் கிளம்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
முதலில் இதே கெட் அப்பில் தான் ஷூட் செய்ய உள்ளதாக சொல்லிவிட்டு தற்போது தாடியை எடுக்க சொன்னால் எப்படி இருப்பது என சிவகார்த்திகேயன் கேட்க, அதற்கு பருத்திவீரன் கார்த்தி போல் இருந்தால் எப்படி டெஸ்ட் ஷூட் எடுப்பது என்று சத்தம் போட்டு சுதா கொங்கரா கறாராக பேசியதாகவும் இதனால் டென்ஷன் ஆன சிவகார்த்திகேயன் சுதாவிடம் சொல்லாமலே அங்கிருந்து சென்றுவிட்டாராம். தற்போது இருவரையும் சமாதானம் செய்யும் பணிகள் நடக்கிறதாம். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷூட்டிங் தொடங்கும் முன்பே மோதலா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்காக தாடி வளர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.