மழை நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.2,000
4 மார்கழி 2024 புதன் 01:23 | பார்வைகள் : 430
விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மழை நிவாரணமாக குடும்பத்துக்கு தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடு, மாடு, பயிருக்கும் இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெஞ்சல்' புயலால், பல மாவட்டங்களில், நவம்பர் 30ம் தேதி முதல் கனமழை பெய்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகம் இருந்தது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால், குடியிருப்புகள், விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் வேலு, பொன்முடி, பன்னீர்செல்வம், கணேசன் உள்ளிட்டோர் மழை பாதிப்பு பகுதிகளில் முகாமிட்டு, சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில், 2ம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் பாதிப்பு விபரங்களை கேட்டறிந்தார்.
இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் தொடர்பாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவு:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
சேதமடைந்த குடிசைகளுக்கு, 10,000 ரூபாயும், கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டவும் முன்னுரிமை அளிக்கப்படும்
மழையால், 33 சதவீதத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட இறவை பாசன பயிர்களுக்கு, 2.47 ஏக்கருக்கு, 17,000 ரூபாய் வழங்கப்படும்
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்து இருப்பின், 2.47 ஏக்கருக்கு 22,500 ரூபாய்
மழையால் பாதிக்கப்பட்ட மானாவரி பயிர்களுக்கு, 2.4 ஏக்கருக்கு 8,500 ரூபாய்
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக 37,500 ரூபாய், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புகளுக்கு 4,000, கோழி உயிரிழப்புக்கு 100 ரூபாய்
விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக, ரேஷன் கார்டு அடிப்படையில், தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டைகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, புதிய சான்றிதழ்களும், மாணவ - மாணவி யருக்கு புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களும் வழங்கப்படும்
நிவாரணம் வழங்குவது தொடர்பாக, தர்ம புரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விபரங்களை, அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஏக்கருக்கு ரூ.30,000
விவசாயிகள் எதிர்பார்ப்பு'புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு, 30,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆஞ்ச நேயலு வெளியிட்டுள்ள அறிக்கை:'பெஞ்சல்' புயல் மற்றும் மழையால் நெல் மட்டுமின்றி, காய்கறிகள், நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட பலவகை பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 2.47 ஏக்கருக்கு, 17,000 ரூபாய் வழங்கினால், ஏக்கருக்கு 7,000 ரூபாய்க்கும் குறைவான நிவாரணம் தான் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சாகுபடிக்கு, 25,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதை கணக்கிட்டு பார்த்து, ஏக்கருக்கு, 30,000 வழங்கினால் மட்டுமே, விவசாயிகளால் மீண்டும் சாகுபடி செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாக்கெட்டில் 5 கிலோ அரிசி
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக அரசு, 5 கிலோ பாக்கெட்டில் இலவச அரிசி வழங்குகிறது.
இதற்காக, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து, விழுப்புரம் மாவட்டத்திற்கு தலா 5 கிலோ எடையில், 75,000 பாக்கெட் அரிசி அனுப்பப்பட்டு உள்ளது.
திருச்சியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு, 75,000 பாக்கெட்டுகள் அனுப்பும் பணி நடக்கிறது.
முதல்வரிடம் விசாரித்த பிரதமர்
முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பை திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும்,
பிரதமரிடம் தெரிவித்தேன். மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ள, புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள, மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என கடிதம் எழுதி இருப்பதை
தெரிவித்து, அதை மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் கோரிக்கையை பிரதமர் உடனடியாக பரிசீலித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என, உறுதிபட நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரேஷன் வாங்க ரேகை பதிவு கட்டாயமல்ல
தமிழக ரேஷன் கடைகளில், கார்டில் உள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக அனைத்து கடைகளுக்கும், 'பிரின்டர்' உடன் கூடிய கைரேகை பதிவு செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
'பெஞ்சல்' புயலால், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழையால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுகிறது. கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல், 'கார்டு ஸ்கேன்' செய்து, பொருட்களை விரைவாக வழங்குமாறு ரேஷன் ஊழியர்களை, உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.