பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது: உயர்நீதிமன்றம்
4 மார்கழி 2024 புதன் 01:25 | பார்வைகள் : 437
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; அவற்றுக்கு நாம் தான் காரணம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: உலக நாடுகளில், 'பிளாஸ்டிக்'குகளை குப்பை தொட்டியில் போடுகின்றனர். ஆனால், நாம் தான் அவற்றை, ஆங்காங்கே வீசுகிறோம். தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் சென்று பார்த்தால், இரு பக்கமும் பிளாஸ்டிக் குவிந்து கிடக்கிறது. அங்கிருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கலாம். சாலைகளின் இரு பக்கமும் சேரும் பிளாஸ்டிக் பொருட்கள், மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, நீர் நிலைகளில் போய் சேருகின்றன.
இதுபோல, சாலைகள் இரு பக்கமும் சேரும் பிளாஸ்டிக் பொருட்களை, அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மட்டும் அகற்றுவது சாத்தியமில்லை. பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் பற்றி, விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான, 'வாக்கத்தான்' போன்ற நிகழ்ச்சிகளை, இப்பகுதிகளில் நடத்துவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறைகள் முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம்.
இனி வரும் காலங்களில் பேரிடர்களுக்கு இயற்கையை மட்டும் குறை கூற முடியாது. அவற்றுக்கு நாமே காரணம். தங்கள் உரிமைகளை பற்றி மட்டும் பேசும் மக்கள், தங்களின் கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை. பிளாஸ்டிக் பாட்டில்களை உடன் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, அவ்வப்போது விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
மலைவாசஸ்தலங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள், அருகிலுள்ள ஊர்களில் இருந்து தான் எடுத்து வரப்படுகின்றன. எனவே, அவற்றை தடுப்பது குறித்த அறிக்கையை, அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.