செயல்படாத வங்கி கணக்குகள்: ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு
4 மார்கழி 2024 புதன் 01:27 | பார்வைகள் : 478
செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், காலாண்டுக்கு ஒருமுறை அந்த கணக்குகளின் விபரங்களை தாக்கல் செய்யுமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
செயல்படாத வங்கி கணக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி மேற்பார்வை துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், வங்கி கணக்குகள் செயலற்றுப் போவதற்கும், உரிமை கோரப்படாத டெபாசிட் கணக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், நீண்ட காலமாக பரிவர்த்தனை நடைபெறாமல் இருப்பது அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் கே.ஒய்.சி., தகவல்களை புதுப்பிக்காதது உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன.
இதுகுறித்து வங்கிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளதாவது: சில வங்கிகளில் மொத்த டெபாசிட்டை விட, செயல்படாத கணக்குகள் அல்லது உரிமைக் கோரப்படாத கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை அதிகமாக உள்ளது. எனவே, வங்கிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக, செயல்படாத அல்லது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதுடன், அவற்றை செயல்படும் கணக்குகளாக மாற்ற எளிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
கே.ஓய்.சி., வாயிலாக, தடையற்ற முறையில் புதுப்பிக்க, மொபைல் அல்லது இணைய வங்கி, பிற வங்கிக் கிளை மற்றும் வீடியோ வாயிலாக வாடிக்கையாளரை அடையாளம் காண்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். அரசுகளால் வழங்கப் படும் நலத்திட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகள், தகவல்களை புதுப்பிக்கவில்லை எனக்கூறி முடக்கப்படுவதைக் காண முடிகிறது. இதுபோன்ற வங்கி கணக்கை தனியாகப் பிரித்து, அவர்களுக்கு திட்டங்களின் நிதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
செயல்படாத அல்லது முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் பயன்படுத்த, சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். காலாண்டுக்கு ஒருமுறை, செயல்படாத வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குறித்த விபரங்களை, மூத்த மேற்பார்வை மேலாளருக்கு, வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.