டிச.,13ம் தேதிக்காக நானும் காத்திருக்கிறேன்: அண்ணாமலை
4 மார்கழி 2024 புதன் 01:30 | பார்வைகள் : 310
எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 'சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றிருப்பது, சாட்சியங்களுக்கு அழுத்தத்தை உருவாக்காதா?' என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து விழுப்புரத்தில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியமானது. மிக வேகமாக, செந்தில்பாலாஜி ஜாமினில் வந்த உடன் வேகமாக அமைச்சர் பதவி, முக்கிய துறை கொடுத்துள்ளனர். கோவை விழாவில், முதல்வர் ஸ்டாலின் , 'எனது மகன் உட்பட தி.மு.க.,வில் உள்ள அமைச்சர்களை பார்க்கும்போது செந்தில்பாலாஜி தான் சிறந்தவர் எனப் பேசியதை' மேற்கோள் காட்டுகிறேன். இது, செந்தில்பாலாஜி ஜாமினில் வெளியே வந்து, அமைச்சர் பதவி ஏற்றபிறகு இரண்டு வாரத்தில் மேடையில் அமர்த்திக் கொண்டு வாசிக்கிற பாராட்டுப் பத்திரம். இதை எல்லாம் சுப்ரீம் கோர்ட் கவனிக்கிறது.
அதைத்தான் நீதிபதி கூறுகிறார், 'இவ்வளவு வேகமாக மாநில அரசு முக்கியமான பதவி கொடுக்கிறது என்றால், அவர் சாட்சிகளை கலைப்பதற்கான வாய்ப்பு அதிகம்' என்று.சுப்ரீம் கோர்ட் அவரை நிரபராதி என்று கூறவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டனர். இதன் பிறகு ஏன் சிறையில் இருக்க வேண்டும் வெளியில் போங்கள் என ஜாமின் கொடுத்துள்ளனர்.
இதை மக்கள் பார்க்கிறார்கள். நீதிமன்றம் என்ன கருத்து சொன்னாலும் கூட மக்கள் இதை உற்று பார்க்கின்றனர்.எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் தப்பித்தாலும் மக்கள் கோர்ட்டில் தப்பிக்க வேண்டும். அதற்கு எல்லாம் பெரிய பதில் 2026ல் கொடுப்பார்கள் என்ற பெரிய நம்பிக்கை உள்ளது.இந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் 13ம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது. அன்று கடுமையான கருத்து தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அன்றைய தினம், அவர் பொறுப்பில் இருக்க வேண்டுமா? துறையில் கையெழுத்து போட வேண்டுமா? நிதி சார்ந்த அதிகாரம் இருக்க வேண்டுமா? குற்றம்சாட்டப்பட்டவர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவர், முகாந்திரம் உள்ள வழக்கில் அரசு அதிகாரிகள் போல் அதிகாரம் கொடுக்க வேண்டுமா என பார்ப்பார்கள். அன்றைய தினம் நீதிபதிகள் என்ன சொல்வார்கள் என்பதை கேட்க நானும் காத்துக் கொண்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.