Paristamil Navigation Paristamil advert login

மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்... இன்று பதவி ஏற்பு

மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்... இன்று பதவி ஏற்பு

5 மார்கழி 2024 வியாழன் 07:52 | பார்வைகள் : 285


மஹாராஷ்டிராவின் புதிய முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் இன்று பதவியேற்கிறார். முதல்வர் பதவி யாருக்கு என்பதில், 10 நாட்களுக்கு மேல் நீடித்த இழுபறி ஓய்ந்தது.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., - சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230ஐ கைப்பற்றி வரலாறு படைத்தது.

அதில், 132 தொகுதிகளை வென்ற பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 57 இடங்களையும், அஜித்தின் தேசியவாத காங்., 41 இடங்களையும் பிடித்தன.

Image 1352602


அதிக தொகுதிகளை வென்றதால், பா.ஜ.,வுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று அக்கட்சி கேட்டது. முதல்வர் பதவி கைவிட்டு போவதை ஷிண்டேயால் ஜீரணிக்க முடியவில்லை; துணை முதல்வர் பதவியை ஏற்கவும் சம்மதிக்கவில்லை. இதனால் இழுபறி நிலவியது.

ஷிண்டே பிடி கொடுக்காமல் இழுத்தடித்ததால் கடுப்பான பா.ஜ., மேலிடம், மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில், 5ம் தேதி புதிய அரசு பதவி ஏற்கும் என அறிவித்து அதற்கான பணிகளை துவக்கியது. முதல்வர் யார் என்பதே தெரியாமல் பதவியேற்பு விழா ஏற்பாடு நடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மும்பையில் நேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. கட்சியின் மேலிட பார்வையாளர்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பங்கேற்றனர்.


சட்டசபைக்கான பா.ஜ., தலைவராக தேவேந்திர பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஷிண்டே, அஜித் ஆகியோருடன் ராஜ்பவன் சென்றார்.

கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தையும், கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்தார். இன்று மாலை 5:30 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதாக கவர்னர் தெரிவித்தார்.

பட்னவிஸ் முதல்வராக பதவியேற்பது இது மூன்றாவது முறை. உடன், அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்கிறார். ஷிண்டேவும் துணை முதல்வர் ஆவாரா என்பது உடனே தெரியவில்லை.

விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

ஒற்றுமையாக பணியாற்றுவோம்


ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருடன் இணைந்து கூட்டணி அரசை வழிநடத்துவேன். ஒற்றுமையாக இருந்து, மக்களுக்காக பணியாற்றுவோம். துணை முதல்வர்களாக இருவர் பதவியேற்பர். அமைச்சரவை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. -தேவேந்திர பட்னவிஸ்

நான் செலுத்தும் நன்றிக்கடன்


இரண்டரை ஆண்டுகளுக்கு முன், முதல்வராக என் பெயரை தேவேந்திர பட்னவிஸ் முன்மொழிந்தார். அதற்கு நன்றியாக, இந்த முறை அவரது பெயரை நான் முன்மொழிந்தேன். பட்னவிசுக்கு வாழ்த்துகள்.ஏக்நாத் ஷிண்டே

ஆளுக்கொரு அனுபவம் உண்டு

'பட்னவிஸ் பதவியேற்கும் போது, நீங்களும், அஜித் பவாரும் பதவியேற்பீர்களா?' என, ஷிண்டேயிடம் நிருபர்கள் கேட்டனர். ''மாலை வரை பொறுத்திருங்கள்,'' என்றார் ஷிண்டே. இடைமறித்த அஜித் பவார், ''அவர் பதவியேற்பாரா என்பது மாலை தான் தெரியும். ஆனால், நான் நிச்சயம் பதவியேற்பேன்; காத்திருக்க மாட்டேன்,'' என்றார். இதை கேட்டதும், அனைவரும் சிரித்தனர். ஷிண்டே குறுக்கிட்டு, ''அவருக்கு காலையிலும், மாலையிலும் பதவியேற்ற அனுபவம் உண்டு,'' என்றதும் இன்னும் பலமான சிரிப்பலை எழுந்தது. கடந்த 2019ல் காலையில் பட்னவிஸ் அரசில் துணை முதல்வராகவும், மாலையில் உத்தவ் தாக்கரே அரசில் துணை முதல்வராகவும் அஜித் பவார் பதவி ஏற்றதைத்தான் ஷிண்டே அப்படி கிண்டல் செய்தார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்