டெஸ்டில் சிக்ஸர் சாதனை படைத்த வீரர்! ருத்ர தாண்டவத்தில் மீண்ட இங்கிலாந்து
6 மார்கழி 2024 வெள்ளி 10:48 | பார்வைகள் : 241
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் அதிரடி சதம் விளாசினார்.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் வெல்லிங்டனில் இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
கிராவ்லே முதல் ஓவரிலே சிக்ஸர் விளாசி, டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஓவரில் சிக்ஸர் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைத்தார்.
ஹென்றி ஓவரில் டக்கெட் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்க, கிராவ்லே 17 ஓட்டங்களில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஜோ ரூட் 3 ஓட்டங்களிலேயே நடையைக்கட்ட, பெத்தெலை 16 ஓட்டங்களில் நாதன் ஸ்மித் வெளியேற்றினார்.
இதனால் இங்கிலாந்து அணி 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது. அப்போது கைகோர்த்த ஹாரி புரூக் (Harry Brook), ஓலி போப் (Ollie Pope) கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது.
இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அரைசதம் விளாசிய போப், 78 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரூர்கே ஓவரில் ஆட்டமிழந்தார்.
எனினும் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹாரி புரூக் 91 பந்துகளில் சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 259 ஆக இருந்தபோது புரூக் 123 (115) ஓட்டங்களில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 280 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளும், ரூர்கே 3 விக்கெட்டுகளும், ஹென்றி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.