சிரியாவில் மீண்டும் தீவிரமாகும் உள்நாட்டு போர்
6 மார்கழி 2024 வெள்ளி 13:25 | பார்வைகள் : 1197
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது.
சிரியா அதிபராக பஷர் அல் ஆசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.
ஆசாத்தை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர்.
ரஷ்ய அதிபர் புதின் தலையீட்டால் ஆசாத் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.
அல் கொய்தாவுடான் நெருங்கிய தொடர்பில் இருந்த இவ்வமைப்பு ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ளது.
கடந்த வாரம் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் படையினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்தது. அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை கைப்பற்றிய நிலையில் ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.
சிரியாவுக்கு ஆதரவாக மீண்டும் ரஷ்யா ராணுவ விமானங்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தலைநகர் டமாஸ்கஸ் - இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கட்டுபாட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து நேற்றைய தினம் ஹமா நகரையும் கைப்பற்றி உள்ளனர்.
ஹமா[hama] நகரம் தலைநகர் டமாஸ்கஸ் - அலெப்போ இடையிலான நேரடி இணைப்புப் பாதை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நகர் பகுதியில் தாக்குதல் தொடர்ந்தால் மக்களும் பாதிக்கப்படுவர் என்பதால் ஹமா நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் ஹமா நகரம் சென்றுள்ளது. கிழக்கில் உள்ள இரண்டு நகர்களை தொடர்ந்து தற்போது மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் [homs] நகரைக் கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானோர் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஹோம்ஸ், கிழக்கு பகுதி நகரங்களுடன் டமாஸ்கஸ் ஐ இணைக்கிறது. இந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் பட்சத்தில் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறுவது எளிதாக அமையும்.