மீண்டும் ஆஸ்கர் வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்?
6 மார்கழி 2024 வெள்ளி 14:38 | பார்வைகள் : 456
'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஹாலிவுட் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் மூலம் இந்தியாவின் புகழை உயர்த்திப் பிடித்தார். தற்போது மீண்டும் ஆஸ்கார் ரேஸில் இணைந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு 3வது ஆஸ்கார் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரித்விராஜ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மலையாள படம் 'ஆடுஜீவிதம்'. பிளஸ்சி இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அரேபிய பாலை வனத்தில் அரபிக்களிடம் மாட்டிக் கொண்ட ஒரு மலையாள இளைஞன் தப்பிக்கும் கதை. இந்த படம் கேரள அரசின் 9 விருதுகளை வென்றது. அதேபோல் ஆடுஜீவிதம் படத்தில் இடம்பெற்ற, 'பெரியோனே' என்கிற பாடல், சிறந்த பாடல் மற்றும் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான இசை என்கிற பிரிவில் பின்னணி இசைக்காகவும் ஹாலிவுட் மியூசிக் மீடியா விருதை வென்றது.
இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசை ஆகிய இரு பிரிவுகளுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் 'ஆடுஜீவிதம்' இடம் பெற்றுள்ளது. சிறந்த பாடல் பிரிவில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஆடுஜீவிதம் படத்தில் இருந்து, இன்டிக்பேர், புதுமழ ஆகிய இரு பாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பின்னணி இசைக்கு 146 படங்கள் தேர்வாகியுள்ளது.
இதிலிருந்து 15 பாடல்கள் மற்றும் 20 பின்னணி இசை தேர்வு செய்யப்பட்டு இறுதிப் பட்டியலுக்கு செல்லும். இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை மீண்டும் நெருங்கி கொண்டிருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.