இஸ்ரேல் அனுமதி மறுப்பு - மரணத்தின் விளிம்பில் ஆயிரக்கணக்கான குழந்தைகள்
7 மார்கழி 2024 சனி 13:15 | பார்வைகள் : 1104
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களாலும், நோய்களினாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவ உதவிக்காக காஸாவிலிருந்து வெளியேற இஸ்ரேலின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் பல குழந்தைகள் காத்திருக்கும் பொழுதே உயிரிழந்தும் வருகின்றனர் .
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காஸா பகுதியின்மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகின்றது. அதில் காஸாவில் மக்கள் நிரம்பிய குடியிருப்புப் பகுதிகளின் மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களில் ஈடுப்பட்டு வருகின்றது. இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட காயங்களினாலும் புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்களினாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்ககணக்கான பொதுமக்கள் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிபெற வேண்டுமென்றால், கட்டாயம் காஸாவை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் உள்ளர்.
ஆனால், அவர்கள் வெளியேற இஸ்ரேலின் அனுமதி தேவை என்பதினாலும், மாதக்கணக்கில் இஸ்ரேல் அவர்களுக்கு அனுமதி வழங்காமல் காத்திருக்க வைப்பதினாலும் ஆயிரக்கணக்கனோரின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. இதில், குறைந்தது 2,500 குழந்தைகளாவது இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
போருக்கு முன்பு காஸாவில் செயல்பட்டு வந்த 36 மருத்துவமனைகளில், இப்பொழுது வெறும் 17 மட்டுமே செயல்படுகின்றன. கடந்த 15 மாதங்களாக காஸாவின் பெரும்பாலான மருத்துவமனைகள் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகிவருகின்றன.
இஸ்ரேல் நடத்தும் இந்தத் தாக்குதல்களினால் காயமடைந்து உடல் பாகங்களை இழந்த நிலையில் வந்துகொண்டே இருக்கும் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவம் அளிக்க போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் மீதமுள்ள மருத்துவமனைகளும் தவித்து வருகின்றன. அதிலும், பல மருத்துவப்பணியாளர்கள் கொல்லப்படுவதினால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவம் பார்க்க ஆளில்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் பாலஸ்தீனர்களின் மனிதாபிமான விவகாரங்களைக் கையாளும் இஸ்ரேலிய ராணுவத்தின் கோகாட் அமைப்பு, “மருத்துவத் தேவையுள்ள குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்ததுடன், அவர்களின் மீது பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே வெளியனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், மரணமடைந்த சிறுவன் இஸ்லாமிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை பற்றிய கேள்விக்கு அந்த அமைப்பு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.
இதுப்பற்றி இஸ்ரேலின் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இஸ்ரேலின் உள்துறையின் புலனாய்வு குழுவால், விண்ணப்பிக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாருக்கேனும் தீவிரவாதத்தோடு தொடர்புள்ளதா என்று விசாரிக்கப்பட்டு தெளிவான பின்னரே அனுமதி அளிக்கப்படும்” என்று கூறினார்.
நோயாளிகள் சிலரது விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களின் குடும்பத்தினரை அனுமதிக்காமல் பாதுக்காப்பைக் காரணம் காட்டி இஸ்ரேல் நிராகரித்து விடுகின்றது. அப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளை கவனித்துக்கொள்ள அவர்களின் தாய்மார்களும் பாட்டிகளும் நிராகரிக்கப்படுவது மிகுந்த வேதனையான ஒன்று.