புதிய ஒர்ஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தொடர்பில் புடினின் திட்டம்
7 மார்கழி 2024 சனி 13:58 | பார்வைகள் : 1750
ரஷ்யா தனது புதிய ஒர்ஷ்னிக் ஹைப்பர்சோனிக் (Oreshnik) ஏவுகணைகளை 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பெலாரஸில் நிலைநிறுத்த திட்டம் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார்.
மின்ஸ்கில் நடைபெற்ற பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவுடன் (Alexander Lukashenko) நடந்த சந்திப்பின் போது அவர் இதை உறுதிப்படுத்தினார்.
ரஷ்யாவின் மிகப்பாரிய அணு ஆயுத ஏவுகணையான ஓரெஷ்னிக் கடந்த மாதம் உக்ரைனின் ட்னிப்ரோ மீது தாக்குதல் நடத்திய பிறகு முதல் முறையாக வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னர், 2023ல், ரஷ்யா அதன் சில tactical அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்தியிருந்தது.
புடின் இது குறித்து கூறியதாவது: “இவ்வளவு சக்திவாய்ந்த ஆயுதங்களை பெலாரஸில் நிலைநிறுத்துவது நிச்சயம் சாத்தியமாகும். இது 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நடக்கும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், ரஷ்யாவில் இந்த ஏவுகணைகளின் தொடர் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
ஒர்ஷ்னிக் ஏவுகணை ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 10 மடங்கு வேகத்தில் பாய்ந்து, 5,500 கிலோமீட்டர் (3,400 மைல்கள்) தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் இடையே மிக நெருங்கிய கூட்டணி இருப்பதுடன், உக்ரைனின் மீது ரஷ்யாவின் தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பு மேலும் விரிவடைந்துள்ளது.
இந்த ஏவுகணை நிலைநிறுத்தம், ரஷ்யா-பெலாரஸ் கூட்டணியை மேலும் பலப்படுத்துவதுடன், மேற்குலக நாடுகளிடையே பதட்டத்தை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்புள்ளது.