மே 1968! - என்ன நடந்தது??
11 மார்கழி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18701
சாள்-து-கோல் தலைமையிலான அரசாங்கம் பெரும் திணறலுக்குள் சிக்கிக்கொண்டது.
சோசலிச மற்றும் கம்யூனிச கட்சி இரண்டும் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க திட்டம் வகுத்தன. அதற்கு கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம் 'சமாதான பேச்சுவார்த்தை!'
பிரதமர் Georges Pompidou, இந்த அமைச்சரவையை கலைக்கும்படி சாள்-து-கோலிடம் கோரியிருந்தார். மறுநாள் மே 29 ஆம் திகதி ஜனாதிபதி சாள்-து-கோல் அமைச்சர்களுடன் சந்திப்பு இடம்பெறுவதாக இருந்தது.
ஆனால், 29 ஆம் திகதி காலை 11 மணிக்கு, சாள்-து-கோல் திடீரென சந்திப்பை இரத்துச் செய்துவிட்டு, எலிசேயில் உள்ள தனது 'ஆவணங்கள்' அனைத்தையும் அகற்றிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.
தனது சொந்த ஊரான Colombey-les-Deux-Églises க்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அங்கு செல்லவில்லை.
ஜனாதிபதி எங்கு இருக்கின்றார் என எவருக்கும் தெரியவில்லை. Colombey-les-Deux-Églises நகருக்கு அவரின் உலங்குவானூர்தி வரவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
அமைச்சரவையை கலைக்கும் திட்டம் பொய்த்துப்போனது. அமைச்சர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 'ஜனாதிபதி தப்பி ஓடிவிட்டார்' என பெரும் கோஷம் எழுப்பப்பட்டது.
பிரதமருக்கே ஜனாதிபதி எங்கு இருக்கிறார் என தெரியவில்லை.
இராணுவத்தினரிடம் ரேடார் மூலம் ஜனாதிபதியின் உலங்குவானூர்தியை கண்டுபிடிக்கும் படி கோரப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டனர்.
பின்னர் தான் தெரியவந்தது, அவர் ஜெர்மனியில் உள்ள பிரெஞ்சு இராணுவத்தலைமையகத்துக்குச் சென்றிருந்தது.
ஆறுமணிநேரம் கழித்து சாள்-து-கோல் மீண்டும் எலிசேக்கு வந்தார். அவருக்கு இராணுவத்தினரின் ஆதரவு பலமாக உள்ளது என்பதை நாடு அறிந்திருந்தது. 'நாளை அமைசர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெறும்!' என ஜனாதிபதி அறிவித்தார்.
மறுநாள் மே 30 ஆம் திகதி நான்கு இலட்சத்தில் இருந்து ஐந்து இலட்சம் வரையானவர்கள் பரிசுக்குள் போராட்டம் நடத்தினார்கள்.
அவர்கள் "Adieu, de Gaulle!" (சாள்-து-கோலுக்கு பிரியாவிடை!) என கோஷம் எழுப்பினார்கள்.
(நாளை)