சைந்தவியுடன் மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ்..!
8 மார்கழி 2024 ஞாயிறு 11:11 | பார்வைகள் : 654
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் மீண்டும் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியில் பாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் தன் பள்ளிக்கால தோழியான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று மலேசியாவில் நடந்த ஜி வி பிரகாஷின் நிகழ்ச்சியில் சாய்ந்தவி கலந்து கொண்டு சில பாடல்களை பாடினார்.
குறிப்பாக, தனுஷ் நடித்த ’மயக்கம் என்ன’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "பிறை தேடும் இரவிலே" என்ற பாடலை இருவரும் இணைந்து பாடியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. "என் ஆயுள் ரேகை நீயடி" என்ற வரியை பாடும்போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்து, மீண்டும் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே, விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் ’சார்’ என்ற திரைப்படத்தில் ’பனங்கருக்கா’ என்ற பாடலை இருவரும் இணைந்து பாடியிருந்த நிலையில், தற்போது மீண்டும் இசை நிகழ்ச்சியில் பாடியுள்ளனர். பாடல்கள் மூலம் இணைந்த ஜிவி பிரகாஷ்- சைந்தவி ஜோடி, வாழ்விலும் இணையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.