உக்ரேனிய நகரத்திற்குள் ஏவப்பட்ட ரஷ்யாவின் ஏவுகணை
10 மார்கழி 2024 செவ்வாய் 05:59 | பார்வைகள் : 1767
உக்ரேனிய நகரமான டினிப்ரோவில் ரஷ்யாவினால் ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ரக ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
“ஒரேஷ்னிக்” என பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை கடந்த மாதம் 21 ஆம் திகதி முதன் முதலாக உக்ரேனுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டது.
ஏவுகணை பிரயோகம் இடம்பெற்று ஒரு சில மணி நேரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய போது, நேரடியாக நேட்டோ அமைப்பிற்கு அச்சுறுத்தலை வெளிப்படுத்தினார்.
உக்ரேனின் நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக அதன் அடுத்த பயன்பாடு இருக்கக் கூடுமென அவர் மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கையினை விடுத்தார்.
இந்த நிலையில், ரஷ்யாவின் மூலோபாய ஏவுகணைப் படையணிகளின் தலைவர் ஜெனரல் சேர்ஜி கரகாயேவ், “ஒரேஷ்னிக்” கனரக அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதுடன் எந்த ஐரோப்பிய இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறனைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாதாரணமாக 500 முதல் ஐயாயிரத்து 500 கிலோமீற்றர் தூரம் பயணிக்கக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளதெனவும் ரஷ்யாவின் மூலோபாய ஏவுகணைப் படையணிகளின் தலைவர் ஜெனரல் சேர்ஜி கரகாயேவ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் வொஷிங்டன் மற்றும் மொஸ்க்கோவினால் கைவிடப்பட்ட சோவியத் ஒன்றிய கால ஒப்பந்தத்திற்கு அமைய, இந்த வகையிலான ஏவுகணைகள் தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.