Paristamil Navigation Paristamil advert login

வித்தைக்காரனை வென்ற கதை

வித்தைக்காரனை வென்ற கதை

11 மார்கழி 2024 புதன் 12:38 | பார்வைகள் : 112


தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.

ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.

ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் “அரசே! இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் ” என்றவாறு முன்னால் வந்து நின்றான்.

அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ‘ உன் வித்தைகளையும் காட்டு ‘ என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். “உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்.”என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்.”அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்.”என்றான்.

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக “ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு” என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து “இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்” என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? ” நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க” ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு ” தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் ” என்றார்.

இராமன் “அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்.” என்று கேட்டுக் கொண்டான்.

அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்