உறவை வலுப்படுத்த வேண்டுமா...?
11 மார்கழி 2024 புதன் 14:46 | பார்வைகள் : 134
உறவுகளில் சில சமயம் உற்சாகம் குறையக்கூடும். ஆனால், அது மீண்டும் உயிர்பெற குறிப்பிட்ட இடைவெளியை எடுத்துக் கொள்ளலாம். இதுபோன்ற நேரங்களில் உங்களது கணவரோ அல்லது மனைவியோ உங்களிடம் இருந்து விலகிச் செல்வது போன்று உங்களுக்கு தோன்றினால் அல்லது உங்களது அன்பை மீட்டெடுக்க நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தால் என்ன செய்வது? ஒவ்வொரு உறவிலும் ஏற்றத் தாழ்வுகள் என்பது இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் சரியான வழிகள் மூலம், உங்களது அன்பை மீண்டும் வழங்குவதன் மூலம் உங்கள் உறவை மீட்டெடுக்கலாம் மற்றும் புதுப்பிக்கலாம். உங்கள் உறவை வலுப்படுத்த உதவும் ஐந்து எளிய வழிகளைப் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
முதலில் நீங்கள் சேர்வதற்கு காரணமான விஷயம் அல்லது இடத்தைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எப்படிச் சந்தித்தீர்கள்? நீங்கள் பகிர்ந்துகொண்ட சிறப்புத் தருணங்கள் மற்றும் உங்களைக் காதலிக்க வைத்தது என்ன? என்பதைப் பற்றி யோசியுங்கள். உங்களது மகிழ்ச்சியையும், தொடர்பையும் மீட்டெடுக்க அந்த நினைவுகளைப் பற்றி பேசுங்கள். நீங்கள் முதன்முதலில் சந்தித்த இடத்திற்குச் செல்லலாம் அல்லது நீங்கள் இருவரும் அனுபவித்த வேடிக்கையான அனுபவத்தை மீண்டும் மறுஉருவாக்கம் செய்யலாம். இந்த தருணங்களை நினைவில் வைத்துக் கொள்வது, மீண்டும் இணைவதற்கும், மீண்டும் நெருக்கமாக உணரவும் உதவுகிறது.
உங்கள் காதல், பெரியதாகவோ அல்லது ஆடம்பரமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. சின்னச் சின்ன விஷயங்கள்தான் உங்களது உறவில் முக்கிய பங்காற்றும். ஒரு அன்பான குறிப்பை விடுங்கள், அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுங்கள் அல்லது அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் வெளியே அழைத்துச் செல்லுங்கள். கட்டிப்பிடித்தல், பாராட்டுதல் அல்லது இனிமையான வார்த்தைகள் மூலம் உங்களது அன்பை வெளிப்படுத்துங்கள். உங்கள் துணை உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்கு நினைவுப்படுத்துங்கள். இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் உங்களது துணை மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும். இது போன்ற ஒரு சிறிய முயற்சி கூட உங்கள் உறவை மேலும் அன்பாக்கவும், வலுப்படுத்தவும் உதவும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி பிஸியாக இருக்கலாம். ஆனால், ஒன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது மிக முக்கியம். எனவே, ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது, நடைப்பயிற்சி செல்வது அல்லது உணவகத்திற்கு செல்வது உள்ளிட்ட வழக்கமாக நீங்கள் கடைபிடிக்கக்கூடிய சில விஷயங்களை தொடருங்கள். ஒன்றாக நேரம் செலவழித்து சிரிப்பதும், ஓய்வெடுப்பதும் உங்களை மகிழ்ச்சியாக இருக்க வைக்கும். இந்த பொன்னான நேரத்தை உங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும், அன்பை பரிமாறிக் கொள்ளும் ஒரு வழியாகவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
புதிய விஷயங்களை ஒன்றாக முயற்சி செய்யுங்கள்: புதிய செயல்களை ஒன்றாக முயற்சி செய்து பார்ப்பது உங்கள் உறவில் உற்சாகத்தைத் தரும். ஒரு புதிய உணவை சமைக்கவும், புதிய இடத்தை ஆராயவும் அல்லது ஒரு குழுவாக புதிய திறமையைக் கற்றுக்கொள்ளவும் முயற்சிக்கலாம். வித்தியாசமான விஷயங்களை முயற்சிப்பதால் உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, உங்கள் நெருக்கத்தையும் அதிகப்படுத்துகிறது. இதுபோன்ற விஷயங்கள் உங்களுக்கு வேடிக்கையான நினைவுகளை உருவாக்கி நீங்கள் ஒரு சிறந்த குழு என்பதை உங்களுக்கு அடிக்கடி நினைவூட்டும். உங்கள் உறவை சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் வைத்திருக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
யதார்த்தமான எதிர்பார்ப்புகளை உருவாக்குங்கள்: உங்கள் உறவு எல்லா நேரத்திலும் சரியாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு உறவிலும் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். சில விஷயங்களைச் செயல்படுத்த இரு தரப்பிலிருந்தும் முயற்சி எடுக்க வேண்டும். சவால்கள் இயல்பான ஒன்றுதான் என்பதை ஏற்றுக்கொண்டு, ஒன்றாக கவனம் செலுத்துங்கள். பொறுமையாக இருங்கள், வெளிப்படையாகப் பேசுங்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள். உங்கள் குறைகளை கலைந்து ஒரு குழுவாக வேலை செய்வதன் மூலம், உங்கள் உறவு வலுவாகவும், உண்மையானதாகவும் மாறும்.