Paristamil Navigation Paristamil advert login

கூலி படத்தில் இணைந்த சாய் அபயங்கர்

கூலி படத்தில் இணைந்த சாய் அபயங்கர்

13 மார்கழி 2024 வெள்ளி 10:30 | பார்வைகள் : 192


தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், கமல், ரஜினி போன்ற டாப் நடிகர்களின் படங்கள் அனைத்தும் அனிருத்தின் கைவசம் உள்ளன. விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்த் நடிக்கும் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, இந்தி படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.

அனிருத்தை போல் தமிழ் சினிமாவில் அடுத்த சென்சேஷனாக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இவரை குட்டி அனிருத் என்றும் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அனிருத்தை கொலவெறி பாடல் பிரபலமாக்கியதை போல், சாய் அபயங்கரை ஆசை கூட மற்றும் கச்சி சேர ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கின. இதனால் தமிழ் சினிமாவில் சாய் அபயங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக காலடி எடுத்து வைத்துள்ள சாய் அபயங்கருக்கு அடுத்தடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 திரைப்படம், பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் ஆகியவை குவிந்துள்ளன. ஒரே நேரத்தில் 3 படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர், தற்போது கூலி படத்தில் பணியாற்றி வரும் தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கூலி படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், அவருக்கு பதிலாக சாய் அபயங்கரை இசையமைப்பாளராக மாற்றிவிட்டார்களா என்கிற கேள்வி எழலாம். ஆனால் அங்க தான் ட்விஸ்டே இருக்கிறது. அனிருத்திடம் கூடுதல் புரோகிராமராக பணியாற்றி வருகிறாராம் சாய் அபயங்கர். இதற்கு முன்னர் அனிருத் இசையமைத்த தேவரா படத்திலும் கூடுதல் புரோகிராமராக பணியாற்றிய சாய் அபயங்கர், தற்போது கூலி படத்திலும் பணியாற்றி வருவதை அண்மையில் விருது விழா ஒன்றில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்