எல்லையில் முழுமையான ரோந்து: ஜெய்சங்கர்
14 மார்கழி 2024 சனி 05:05 | பார்வைகள் : 158
லடாக்கின் டெப்சாங்கில் உள்ள அனைத்து ரோந்து பகுதி மற்றும் வரலாற்று ரீதியாக இந்தியாவின் ரோந்து எல்லையாக இருந்த கிழக்கு பகுதியின் எல்லைகளுக்கு, நம் படையினர் சென்று வருகின்றனர்,” என, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா இடையிலான எல்லை ஒப்பந்தம் குறித்து லோக்சபாவில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில்:
சீனாவுடனான கடைசி ஒப்பந்தம் டெப்சாங் மற்றும் டெம்சோக் தொடர்பானது. சபையில் இதற்கு முன் பேசும்போது, இதுகுறித்து தெளிவாகவே விளக்கி உள்ளேன்.
அதாவது, எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக கடந்த காலங்களிலும் சீனாவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.
அந்த ஒப்பந்தப்படி இருதரப்பும் தங்கள் படைகளை தற்காலிகமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்திலும் அதுபோன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
லடாக்கின் டெப்சாங்கில் உள்ள அனைத்து ரோந்து பகுதி மற்றும் வரலாற்று ரீதியாக இந்தியாவின் ரோந்து எல்லையாக இருந்த கிழக்கு பகுதியின் எல்லைகளுக்கு, நம் படையினர் சென்று வருகின்றனர்.
சீனாவுடனான ஒப்பந்தத்தில் அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, என் முந்தைய அறிக்கையை உறுப்பினர் மீண்டும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேபாளத்தின் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டு உள்ள அந்நாட்டு வரைபடத்தில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதி இடம் பெற்று இருப்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு ஜெய்சங்கர் பதில் அளிக்கையில், “இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை சொந்தம் கொண்டாட நினைத்து, நம் அண்டை நாடுகள் அதில் மாற்றம் செய்ய வேண்டும் என நினைத்தால், அது நிச்சயம் நடக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் சொல்வதை இந்த ஒட்டுமொத்த சபையும் தெளிவாக புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்,” என்றார்.
வங்கதேச விவகாரம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில்:வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. நம் வெளியுறவுத்துறை செயலர் சமீபத்தில் டாக்கா சென்றபோது, வங்கதேச இடைக்கால அரசிடம் நம் கவலைகளை வெளிப்படுத்தினார். அவர்கள் தங்கள் சொந்த நலன் கருதி, இந்த விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுப்பர் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.