கனமழையால் தென் மாவட்டங்கள் ஸ்தம்பித்தன
14 மார்கழி 2024 சனி 05:09 | பார்வைகள் : 156
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், நேற்று அடைமழை வெளுத்து வாங்கியது. இதனால், குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, வங்கக்கடலில் அடுத்த காற்றழுத்தத் தாழ்வு உருவாக உள்ளதாகவும், மழை இன்னும் வலுக்கும் என்றும், எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. 'பெஞ்சல்' புயல் காரணமாக, வடமாவட்டங்களான விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்டவற்றில், மழை கொட்டித் தீர்த்தது.
இந்த பாதிப்பில் இருந்து, இம்மாவட்டங்கள் மெல்ல மீண்டு வந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதில், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு ஏற்ப, நேற்று முன்தினம் மாலை முதல், இம்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் அடைமழை கொட்டியது.
இதில், ஊத்து பகுதியில், அதிகபட்சமாக, 54 செ.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றிஉள்ள பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
தென்காசி மாவட்டத்தில், குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
திருநெல்வேலி டவுன் பகுதியில் பெய்த மழையால், ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலைய பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால், 22 வீடுகள் சேதமடைந்தன. கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் நீரில் மூழ்கின. இம்மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. சிவகாசி, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, காரியாபட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலான மழையும், ஆங்காங்கே கனமழையும் பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக வெம்பகோட்டையில், 14 செ.மீ., மழை பதிவானது. ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் சன்னிதியில் மழைநீர் தேங்கியது. விருதுநகரில் வடிகால்களை சரியாக துார்வாரததாலும், ரோடுகள் பள்ளமாக இருந்ததாலும் மழைநீர் நீண்ட நேரம் கழித்து வடிந்தது. மழைக்கு, 22 வீடுகள் சேதமடைந்தன.
திருச்சுழி காளையார்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. வெம்பக்கோட்டை சிப்பிப்பாறை, பரளச்சி பெரிய கண்மாய்களிலும் உடைப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், வெங்காயம், மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கின.
சாத்துார் நல்லி கிராமத்தில் தற்காலிகபாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.
துாத்துக்குடி
துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டியில், 36.4 செ.மீ. மழை பதிவானது.
தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாமிரபரணி ஆற்றில், 75,000 கன அடி தண்ணீர் செல்கிறது. இதனால், துாத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகாவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள 20 கிராமங்களை சேர்ந்த, 700 பேர் நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
துாத்துக்குடியில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலையில் உள்ள முக்காணி பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையாக முக்காணி, ஏரல், பேட்மாநகரம், ஆழ்வார்தோப்பு, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் வழியாக திருச்செந்துார் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துாத்துக்குடி அருகே பொட்டலுாரணி - கீழசெக்காரக்குடி கிராமங்களுக்கு இடையேயான தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. செய்துங்கநல்லுார் --- கொங்கராயக்குறிச்சி, தாதன்குளம் -கிளாக்குளம், ஆழ்வார்தோப்பு -ஆழ்வார்திருநகரி இடையேயான பாலங்களில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் பட்டினமருதுார் --- குளத்துார் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி
கோவில்பட்டி மற்றும் கயத்தாறு, கழுகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. 30க்கும் மேற்பட்ட வீடுகள் முழுதும் மழை நீரால் நிரம்பி உள்ளதால். அங்குள்ள மக்கள் லாயல் மில் காலனியில் உள்ள சமுதாய கூட்டத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
காமநாயக்கன்பட்டியில் உள்ள தாரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கோவில்பட்டி --- பசுவந்தனை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகர் முழுதும் சாலைகளில் மழைநீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.
கோவில்பட்டி இ.எஸ்.ஐ., மருந்தகத்தின் பின்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மாவட்டம் முழுதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்நிலை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
இதற்கிடையே, தென்மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், வங்க கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 16ம் தேதி முதல் மீண்டும் மழை தீவிரமடையும் என்பதாலும் பீதி ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் எங்கெங்கு கனமழை?
இடம் - மழை அளவு (செ.மீ.,யில்)ஊத்து - -- 54அம்பாசமுத்திரம் --- 36.6 கனடியன் -- 35.1 காக்காச்சி --- 35மாஞ்சோலை --- 32நாலுமுக்கு --- 31மணிமுத்தாறு --- 29.8சேரன்மகாதேவி --- 22.5 சேர்வலாறு --- 23.7