தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் காலமானார்
14 மார்கழி 2024 சனி 09:31 | பார்வைகள் : 183
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான இளங்கோவன் 75 இன்று (டிச.14) காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இளங்கோவனுக்கு கடந்த மாதம் இறுதியில் உடல் நலம் குறைந்தது. காய்ச்சல் பாதிப்பு மற்றும் சளி தொல்லையால், சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில், அவருக்கு, நுரையீரலில் சளி தொற்று அதிமாகி, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இன்று இறந்தார்.
தலைவர்கள் இரங்கல்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் வேதனையை தருகிறது என கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்; 'பொது வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடித்து, தான் சார்ந்த இயக்கத்தின் மீது ஆழ்ந்த மரியாதையும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்,' என புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் எதிர்கட்சி தலைவர் ராகுல், காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று இளங்கோவன் உடல் நலம் குறித்து நேரில் சந்தித்து விசாரித்தார்.
இளங்கோவன் வாழ்க்கை வரலாறு
1948ம் ஆண்டு டிசம்பர் 21ல் ஈரோட்டில் இளங்கோவன் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் பட்டம் பெற்ற இவர் தந்தை சம்பத் மறைவுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தாயார் சுலோசனா சம்பத், அதிமுக அமைப்பு செயலாளராக இருந்தார்.
சிவாஜி கட்சியில் இளங்கோவன்
1984ல் நடந்த சட்டசபை தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன், வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்ஏ.,வானார். பின்னர் நடிகர் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியில் சேர்ந்து 1989ல் நடந்த தேர்தலில் ஈரோடு பவானி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். சிவாஜி, தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியோடு இணைத்தபோது, இளங்கோவன் மீண்டும் தாய் கட்சியான காங்கிரசில் ஐக்கியமானார்.
1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1996 முதல் 2001 வரை தமிழக காங்கிரசின் மாநில தலைவராக பதவி வகித்தார். 2004 லோக்சபா தேர்தலில் அன்றைய கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 2,14,477 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.பி.,யாகி மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரானார்.
2009 லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2014 லோக்சபா தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றார். 2014 முதல் 2017 வரை மீண்டும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றார். 2019 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திடம் தோல்வியை சந்தித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்த தனது மகன் திருமகன் 2023ல் திடீரென மரணமடைந்ததால், அதே தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.