ஐபிஎல் ஏலம் VS செஸ் சாம்பியன் குகேஷ் பரிசுத் தொகையால் சர்ச்சை
14 மார்கழி 2024 சனி 15:46 | பார்வைகள் : 117
உலக செஸ் அரங்கில் தமிழகத்தின் இளம் வீரர் டி. குகேஷ் புதிய வரலாறு படைத்துள்ளார்.
நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை டி.குகேஷ் கைப்பற்றியுள்ளார்.
18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷ், இதுவரை இந்த சாதனையை நிகழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் கேரி கேஸ்பரோ தன்னுடைய 22வது வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையையும் டி.குகேஷ் பெற்றுள்ளார்.
செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்த பரிசுத்தொகை 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், வெற்றியாளரான குகேஷுக்கு 1.35 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 11.45 கோடி ஆகும்.
அவரது எதிர் போட்டியாளரான லிரெனுக்கு 1.15 மில்லியன் டொலர் என்ற முறையில் ரூ. 9.75 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குகேஷுக்கு வழங்கப்பட்டுள்ள பரிசுத் தொகை குறித்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதம் எழுந்துள்ளது.
குறிப்பாக, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில் வீரர்கள் பெறும் தொகையுடன் குகேஷின் பரிசுத்தொகையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, செஸ் சாம்பியனுக்கு வழங்கப்படும் தொகை குறைவாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உதாரணத்துக்கு, லக்னோ அணியால் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது குகேஷுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட 2.5 மடங்கு அதிகமாகும்.
அதே நேரத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் 13 வீரர்கள் குகேஷ் பெற்ற பரிசுத் தொகையை விட அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்துள்ள குகேஷுக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி ரொக்க பரிசு அறிவித்துள்ளது.