ஸ்டீவ் ஸ்மித் சாதனை சதம்.,ஹெட் 152! வழியனுப்பிய பும்ரா..சூடுபிடித்த காபா டெஸ்ட்
15 மார்கழி 2024 ஞாயிறு 12:48 | பார்வைகள் : 139
பிரிஸ்பேனில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் சதம் விளாசினர்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது.
ஆனால், மழை குறுக்கிட்டதால் 13.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையிலேயே முதல்நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்று அவுஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
கவாஜா (21), மெக்ஸ்வீனி (9) ஆகியோரின் விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றினார். அதன் பின்னர் ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (Travis Head) இருவரும் நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பவுண்டரிகளை விரட்டி அதிரடி காட்டி ஹெட், டெஸ்டில் தனது 9வது சதத்தினை பதிவு செய்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித் 33வது சதம் விளாசினார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணிக்காக அதிக டெஸ்ட் சதம் அடித்த இரண்டாவது வீரர் சாதனையை படைத்தார். முதலிடத்தில் ரிக்கி பாண்டிங்கும் (41), மூன்றாவது இடத்தில் ஸ்டீவ் வாக்கும் (32) உள்ளனர்.
ஸ்டீவ் ஸ்மித் 101 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பும்ரா ஓவரில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ட்ராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களிலும், மார்ஷ் 5 ஓட்டங்களிலும் பும்ராவின் ஒரே ஓவரில் அவுட் ஆகி வெளியேறினர்.