கிரீஸ் கடல் பகுதியில் அகதிகள் படகு விபத்து! 5 பலி மற்றும் 50 மாயம்
15 மார்கழி 2024 ஞாயிறு 13:26 | பார்வைகள் : 225
துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் கார்பதோஸ் தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
80 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், 29 பேர் மீட்கப்பட்டிருந்தாலும், 50 பேர் இன்னும் காணவில்லை என்ற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
50 கிமீ வேகத்தில் வீசும் காற்று காரணமாக மீட்புப் பணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. கடலோர காவல்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பாவை நோக்கி புறப்படும் அகதிகள், பிழைப்பு தேடி துணிச்சலான கடல் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக கிரீஸ் நாட்டை நோக்கிய பயணம் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறது.
கடந்த ஜனவரியில் மத்திய தரைக்கடலில் 64 பேரும், ஜூன் மாதம் மைகோனோஸ் தீவில் 8 பேரும் இதே போன்ற விபத்துகளில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.