X தளத்திற்கு இனி ஹேஷ்டேக்குகள் இனி தேவையில்லை! எலான் மஸ்க்கின் புதிய கருத்து
19 மார்கழி 2024 வியாழன் 08:12 | பார்வைகள் : 134
பிரபலமான சமூக ஊடக தளமான எக்ஸில் (X) இனி Hashtag தேவையில்லை என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ட்விட்டர் நிறுவனத்தை, உலகின் முன்னணி பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தினார்.
டிவிட்டரை "எக்ஸ்" என பெயர் மாற்றம் செய்த மஸ்க், அந்த நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். முக்கியமாக, பல உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுடன், எக்ஸ் தளத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பிலும் புதிய மாற்றங்களை புகுத்தினார்.
வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள், செயற்கை நுண்ணறிவு சாட்போட் ("grok") போன்ற புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக்குகள் இனி தேவையில்லை என எலான் மஸ்க் அறிவித்துள்ளது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
முன்பு டுவிட்டராக இருந்தபோதும், தற்போது எக்ஸ் ஆக இருக்கும்போதும், ஹேஷ்டேக்குகள் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்துள்ளன.
பயனர்கள் தங்கள் பதிவுகளுடன் தொடர்புடைய ஹேஷ்டேக்குகளை சேர்ப்பதன் மூலம், குறிப்பிட்ட தலைப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக தேட முடிந்தது.
மேலும், எந்த தலைப்பு அதிகமாக பேசப்படுகிறது (ட்ரெண்டிங்) என்பதையும் ஹேஷ்டேக்குகள் மூலம் அறிய முடிந்தது.
ஆனால், இனி ஹேஷ்டேக்குகள் தேவையில்லை என மஸ்க் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, கோர்ட் சாட்போட் அளித்த பதிலை பகிர்ந்து தனது கருத்தை மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார். "சிஸ்டத்துக்கு ஹேஷ்டேக்குகள் தேவையில்லை, அவை பார்க்க அசிங்கமாக உள்ளன" என்று அவர் கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் தற்போது என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை அறிய வேறு வழிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே மஸ்க் இவ்வாறு கூறுகிறார் என்றும் இணைய வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.