நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க
20 மார்கழி 2024 வெள்ளி 14:30 | பார்வைகள் : 156
எப்போதும் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால், அப்படி இருப்பது என்னவோ எளிமையான காரியம் கிடையாது. எனினும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமா அல்லது வருத்தமாக இருக்க வேண்டுமா என்பதை நாமே தேர்வு செய்கிறோம். ஒருவேளை நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்பட்டால் நீங்கள் கைவிட வேண்டிய ஒரு சில மோசமான பழக்கங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது: தொடர்ச்சியாக உங்களுடைய வாழ்க்கையை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது, உங்களுடைய மகிழ்ச்சியை குறைத்து, பாதுகாப்பு இல்லாத ஒரு உணர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலுமே சவால்கள் இருக்கும். எனவே உங்கள் மீதும், உங்களுடைய மகிழ்ச்சியின் மீதும் கவனம் செலுத்துங்கள்.
அளவுக்கு அதிகமாக யோசிப்பது: தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருப்பது மற்றும் உங்களுடைய கடந்த கால தவறுகளைப் பற்றியும், எதிர்காலத்தில் நீங்கள் நன்றாக இருப்பீர்களா என்பது குறித்த சந்தேகங்களையும் கைவிடுங்கள். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் மட்டுமே ஏற்படும். எனவே, இதற்கு பதிலாக கடந்த காலத்தை கடந்தவையாக பாருங்கள். தற்போதைய தருணத்தில் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
எதிர்மறையான சுய பேச்சு: உங்களைப் பற்றி நீங்களே தவறாக பேசுவதை தவிர்க்கவும். மற்றவர்களை நீங்கள் எவ்வளவு அன்போடு, கனிவோடு நடத்துகிறீர்களோ, அவ்வாறே உங்களையும் நடத்துங்கள்.
அனைவருக்கும் நல்லவர்களாக இருக்க முயற்சி செய்தல்: ஒவ்வொரு நபரும் வித்தியாசமானவர்கள். எனவே அனைவரையும் உங்களால் பூர்த்தி செய்ய முடியாது. மேலும் அது உங்களுடைய வேலையும் கிடையாது. நீங்கள் செய்யும் ஒரே விஷயம் ஒருவரை திருப்திப்படுத்தலாம், மற்றவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம். எனவே ஆரோக்கியமான வரம்புகளை அமைத்து, உங்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
விஷயங்களை தள்ளிப் போடுவது: நேரத்தை வீணாக கழிப்பது மற்றும் தாமதப்படுத்துவது ஆகியவை உங்களுக்கு மன அழுத்தம், பதற்றம் மற்றும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். எனவே, அதற்கு பதிலாக உங்களுடைய வேலைகளை நீங்கள் சமாளிக்கக் கூடிய சிறிய வேலைகளாக பிரித்து உடனடியாக முடிப்பதற்கும் முயற்சி செய்யுங்கள்.
கசப்பான உறவில் தொடர்ந்து நீடிப்பது: எதிர்மறையான நபர்கள் அல்லது ஆற்றல் கொண்டவர்களோடு உறவு வைத்துக் கொள்வது உங்களுடைய மகிழ்ச்சியை சீர்குலைக்கும். எனவே அதற்கு பதிலாக அன்பு, மரியாதை மற்றும் உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நபர்களை உங்களை சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
பெர்ஃபெக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது: எல்லா நேரத்திலும் உங்களால் பெர்ஃபெக்டாக இருக்க முடியாது. எனவே இதனை நினைத்து நீங்கள் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்தாதீர்கள். மாறாக உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பிறருடைய முன்னேற்றத்தை கொண்டாடுங்கள், பாராட்டுக்களை வழங்குங்கள்.