பார்லி., தள்ளுமுள்ளு விவகாரம்: ராகுலிடம் விசாரிக்க போலீஸ் முடிவு
21 மார்கழி 2024 சனி 02:56 | பார்வைகள் : 153
பார்லி., வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், இரு பா.ஜ., - எம்.பி.,க்கள் காயமடைந்த விவகாரத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அம்பேத்கரை அவமதிக்கும் வகையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாகக் கூறி, காங்., - தி.மு.க., உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி எம்.பி.,க்கள், பார்லி., வளாகத்தில் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு போட்டியாக, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்களும் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், பா.ஜ., - எம்.பி.,க்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் காயமடைந்தனர்.
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கீழே தள்ளி விட்டதாக, பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்தார். இதை ராகுல் திட்டவட்டமாக மறுத்தார். பா.ஜ., - எம்.பி.,க்கள், ராகுல் மீது போலீசில் புகார் அளித்தனர். இதன்படி, அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ராகுலை அழைக்க டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தள்ளுமுள்ளு ஏற்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை கோரி, பார்லி., செயலகத்துக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றுவது குறித்தும் பரிசீலனை நடக்கிறது. இது தொடர்பான விசாரணைக்கு ராகுலை அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. இதற்கிடையே, இந்த வழக்கு டில்லி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.