சென்னைக்கு 390 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
21 மார்கழி 2024 சனி 03:04 | பார்வைகள் : 170
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு 390 கிமீ கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர கூடும். இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட உள்ளன.