தேர்தல் ஆணைய ஒருமைப்பாட்டின் மீது மற்றொரு தாக்குதல்; கார்கே குற்றச்சாட்டு
22 மார்கழி 2024 ஞாயிறு 12:02 | பார்வைகள் : 141
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை மோடி அரசு அழிப்பதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தேர்தல் தொடர்பான சில ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு சட்டதிருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் போன்ற சில குறிப்பிட்ட ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்கு கிடைக்கும். அதேவேளையில் மின்னணு ஆவணங்கள் கிடைக்காது.
இந்த சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'தேர்தல் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த திருத்தம், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிப்பதற்கான மோடி அரசின் மற்றொரு தாக்குதலாகும்.
முன்பு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியை நீக்கினீர்கள். தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டும், தேர்தல் ஆவண தகவல்களை கொடுப்பதை கட்டுப்படுத்துகிறீர்கள்.
வாக்காளர் நீக்கம், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஒவ்வொரு முறை காங்கிரஸ் கடிதம் எழுதுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் அலட்சியமாக பதில் அளிப்பதுடன், புகார்கள் மீது தீவிரம் காட்டுவதில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாததற்கு இதுவும் ஒரு சான்றாகும். மோடி அரசின் இந்த தாக்குதல்களில் இருந்து அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.