வங்கதேசத்தினர் சட்டவிரோத குடியேற்றம்: டில்லியில் வீடு வீடாக போலீஸ் சோதனை
22 மார்கழி 2024 ஞாயிறு 12:04 | பார்வைகள் : 159
டில்லியின் வெளிப்புற பகுதியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் யாரும் தங்கி உள்ளனரா என்பதை கண்டறிய போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தினர். இதில் முறையான ஆவணங்கள் இல்லாமல் 175 பேர் தங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
டில்லியில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் வெளியிட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், டில்லியில் சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் தங்கி உள்ளதாகவும் அவர்களை கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அரசியல் கட்சிகளும் கவலை தெரிவித்து இருந்தன.
இதனையடுத்து பள்ளி நிர்வாகங்கள் மாணவர் சேர்க்கையின் போது சட்டவிரோதமாக தங்கி உள்ள வங்கதேசத்தவர் குறித்து அடையாளம் காண வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், டில்லி போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளதாக கவலை எழுந்ததைத் தொடர்ந்து, அவர்களை தேடி அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அவ்வாறு தங்கி உள்ளவர்களை பிடித்து வெளியேற்றும் பணி நடக்கும். டில்லியின் வெளிப்புறப் பகுதியில் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டது. சிறப்பு போலீஸ் குழுவினர் இச்சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், வீடு வீடாக சென்று சோதனை நடத்தியதுடன், ஆவணங்களும் சோதனை ஆய்வு செய்யப்பட்டன. இதில் 175 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் தங்கி உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களின் ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் கூறிய இடங்களில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. இதில் கிடைக்கும் முடிவுகளை வைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் டில்லி போலீசார் கூறியுள்ளனர்.