Paristamil Navigation Paristamil advert login

நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டில் கல் வீசி தாக்குதல்! முதல்வர் கண்டனம்

நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டில் கல் வீசி தாக்குதல்! முதல்வர் கண்டனம்

23 மார்கழி 2024 திங்கள் 02:49 | பார்வைகள் : 147


தியேட்டரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டி, நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்ற போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு, 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே விடப்பட்டுள்ளார்.

அவரது கைது நடவடிக்கை தெலங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. கைது நடவடிக்கை குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில், அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது தான் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்திருந்தார். மேலும், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தார்.

ஆனால், முதல்வரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், ' என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்த துறையையும், அரசியல்வாதியையும் குறை சொல்ல விரும்பவில்லை,' என்று கூறினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது, கற்களை வீசி உஸ்மானியா பல்கலைகழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்ற அவர்கள், அங்கிருந்து பூந்தொட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ரேவதிக்கு நீதி கேட்டும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதனிடையே, அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முதல்வர் கண்டனம்

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், ' திரை பிரபலங்கள் வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசமின்றி டிஜிபி, போலீஸ் கமிஷனர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்