மூன்றாம் உலகப் போருக்கு காரணம் பைடன்.... ட்ரம்பின் மகன் உட்பட பலர் கடும் விமர்சனம்
18 கார்த்திகை 2024 திங்கள் 13:41 | பார்வைகள் : 594
உலக நாடுகள 3 ஆம் போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்து வருகின்றார்கள்.
உக்ரைனுக்கு ஏவுகணை அனுமதி அளித்து மூன்றாம் உலகப் போரைத் தூண்டுவதாக ஜோ பைடன் மீது ட்ரம்பின் மகன் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தெரிவாகி, அவர் பொறுப்பேற்க இன்னும் 2 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் ஜோ பைடன் மிக முக்கியமான இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஜோ பைடன் அளித்துள்ள அனுமதியால் இனி அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தலாம்.
ஆனால் ஜோ பைடனின் இந்த திடீர் முடிவை ட்ரம்பின் மகன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமது தந்தை உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர கடும் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், ஜோ பைடனின் இந்த முடிவு போரை இன்னும் உக்கிரமாக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலகப் போரினைத் தூண்டும் நடவடிக்கை இதுவென குறிப்பிட்டுள்ள அவர், தமது தந்தை அமைதியை உருவாக்கி உயிர்களை காப்பாற்றும் வாய்ப்பு உருவாகியுள்ளதை தடுக்கும் நோக்கம் இதுவென்றும் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தையே டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். ஆட்சி முடிவுக்கு வர இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், ஏன் இந்த திடீர் முடிவு என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கையில், ஜோ பைடனின் இந்த திடீர் முடிவால் போர் அடுத்த கட்டத்திற்கு நகரும் ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் இந்த முடிவை ரத்து செய்வார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது மிக உக்கிரமான தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளதன் சில நாட்களில் ஜோ பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இது நாள் வரையில், ஏவுகணை அனுமதி அளிப்பதை கடுமையாக எதிர்த்து வந்த ஜோ பைடன், சமீபத்திய உக்கிரமான ஏவுகணைத் தாக்குதல் மற்றும் வட கொரிய ராணுவம் உக்ரைனில் களமிறங்கும் ஒப்பந்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.