கோவில் சொத்துக்களை பாதுகாக்க வக்பு சட்டத்தை திருத்த வேண்டும்: ஷோபா
19 கார்த்திகை 2024 செவ்வாய் 02:51 | பார்வைகள் : 167
வக்பு வாரிய திருத்தச் சட்டம் வந்தால் மட்டுமே, ஹிந்து கோவில் சொத்துக்கள் கூட பாதுகாக்கப்படும் என, மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், திருச்செந்துறை உட்பட பல கிராமங்களில், ஹிந்து கோவில் மற்றும் தனியார் நிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என அறிவிக்கப்பட்டதால், நில உரிமையாளர்கள் பத்திரம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, நில உரிமையாளர்கள் தரப்பிலும், தமிழக பா.ஜ., சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று திருச்சி வந்தார். பின், திருச்செந்துறை கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள சந்திரசேகர சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார். பிரதமர் மோடி பெயரில் அர்ச்சனை செய்தார்.
திருச்செந்துறை கிராமத்தில் இருக்கும் பெரும்பாலான நிலங்கள், வக்பு வாரியத்துக்குச் சொந்தமானவை என அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராமத்தில் நிலம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராடி வருகின்றனர்.
அவ்வியக்கத்தவர் நேற்று நடத்திய கூட்டத்தில், ஷோபா கரந்தலாஜே பங்கேற்று பேசினார். அந்த கிராமத்தில், வக்பு வாரியத்துக்கு நிலத்தை பறி கொடுத்தவர்களையும் சந்தித்து பேசினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
நாடு சுதந்திரம் அடைந்த பின், நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார். அப்போது, சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தான் வக்பு வாரியத்திற்கு சொந்தமானவையாக இருந்தன. அதன்பின், ஏராளமான நிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளன. தற்போது, 38 லட்சம் ஏக்கர் நிலம், வக்பு வாரியத்திற்கு சொந்தமாக உள்ளன.
கடந்த 1,300 ஆண்டுகளுக்கு முன், பராந்தக சோழனால் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி கோவில் நிலம் கூட, வக்பு வாரியத்துக்கு சொந்தமானது எனக் கூறத் துவங்கி உள்ளனர். அந்நிலையை மாற்றத் தான் சட்டப் போராட்டம் நடத்துகிறோம்.
கடந்த 1995ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், நான்கு பேர் சேர்ந்து கோரிக்கை வைத்தாலே, குறிப்பிட்ட நிலத்தை அவர்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
பெங்களூரில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திய 3.5 ஏக்கர் நிலத்தை, வக்பு வாரியத்துக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர்.
அதேபோல், சட்டப்பிரிவு 83 மற்றும் 85ன்படி நிலம் தொடர்பான விவகாரத்தை, நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியதில்லை. முஸ்லிம் சமுதாயத்தினர் பொறுப்பு வகிக்கும் தீர்ப்பாயத்திற்கு கொண்டு சென்று தான் தீர்வு பெற வேண்டும்.
நிலத்தை ஆக்கிரமிக்கும் சமுதாயத்தினருக்கு எதிராக நியாயம் கேட்டு, அதே சமுதாயத்தினர் இடம் பெற்று உள்ள தீர்ப்பாயத்திற்கு கொண்டு சென்றால், எப்படி நியாயம் கிடைக்கும்?
ஆயிரக்கணக்கான புகார் மனுக்கள் குவிந்துள்ள தீர்ப்பாயத்தில், ஒன்றுக்குகூட இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதுவரை, 1 ஏக்கர் நிலத்தை கூட திரும்ப பெற முடியவில்லை. அதனால் தான், சட்டப் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது.
வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, விவசாய நிலங்களுக்கும், கோவில் நிலங்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். திருச்செந்துறை கிராமத்தில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் தெரிவித்தவர்களுக்கு, இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
கோவில் சொத்துக்கள், நகைகள் தேவையென கருத்தும் மாநில அரசு, ஹிந்து கோவில்களுக்கான சொத்துக்களை பாதுகாக்க வேண்டாமா?
இவ்வாறு அவர் கூறினார்.