மத்திய வரி வசூலில் மாநிலங்களுக்கு 50 சதவீதம் : ஸ்டாலின் வலியுறுத்தல்
19 கார்த்திகை 2024 செவ்வாய் 02:55 | பார்வைகள் : 145
மத்திய அரசின் வரி வருவாயில் சரி பாதியை மாநிலங்களுக்கு கொடுத்தால் மட்டுமே, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மாநில அரசுகள் திருப்திகரமாக செயல்பட முடியும்,'' என்று, சென்னை வந்துள்ள 16வது நிதிக்குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மத்திய, மாநில அரசுகள் இடையிலான நிதி பகிர்வு தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க, 16வது நிதிக்குழுவை மத்திய அரசு நியமித்தது. அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று வருகின்றனர். நேற்று சென்னையில் அவர்கள் தமிழக குழுவை சந்தித்தனர்.
பாதிக்கிறது
அந்த ஆலோசனை கூட்டத்தில், நிதி பங்கீடு குறித்த தமிழக அரசின் கருத்துக்களை முதல்வர் ஸ்டாலின் எடுத்துக் கூறினார். தமிழகம் எதிர்கொள்ளும் முக்கியமான மூன்று பிரச்னைகளையும் அவர் பட்டியலிட்டார். அந்த சவால்களை எதிர்கொள்ள, மத்திய அரசின் பங்கு அதிகரித்தாக வேண்டியது அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
ஸ்டாலின் உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:
சுகாதாரம், கல்வி, சமூக நலம், வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கு, பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து, மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.
அவற்றுக்கு தேவையான வருவாயை பெருக்க, மாநில அரசுகளிடம் அதிகாரம் குறைவாக உள்ளது. கடந்த நிதிக்குழு பரிந்துரையால், மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாய் பங்கு, 41 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்ததை கணக்கிட்டால், மத்திய அரசின் வருவாயில், 33.1 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு தரப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான வரி பகிர்வில் இடம் பெற்றிருக்கும், மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் போன்றவற்றை, மத்திய அரசு பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம்.
மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், மாநில அரசின் பங்கு அதிகரிப்பது, தமிழகம் போன்ற மாநிலங்களின் நிதி நிலைமையை பாதிக்கிறது.
அனைத்து துறைகளிலும் சிறப்பான நிர்வாகம் காரணமாக முன்னேறிஉள்ள தமிழகத்தை தண்டிப்பதை போல, தற்போதைய வரி பகிர்வு முறை அமைந்துள்ளது.
தீர்வு தேவை
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்குவது அவசியம் தான். என்றாலும், சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்காமல் இருந்தால், அவற்றின் வளர்ச்சியை தக்க வைக்க முடியாது. அது, பின் தங்கிய மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கையும் பாதிக்கும்.
எனவே, கடந்த காலங்களில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை, 16வது நிதிக்குழு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மூன்று முக்கிய சவால்கள்
தமிழகம் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய பிரச்னைகளை, முதல்வர் விவரித்தார்:
1) சில ஆண்டுகளாக, தமிழகம் இயற்கை பேரிடர்களால் பேரழிவை சந்தித்து வருகிறது. இழப்புகளை சரி செய்ய, கணிசமான நிதி செலவிட வேண்டியுள்ளது. அதனால், வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாமல் போகிறது.
2) முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது தமிழக மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது, உத்தர பிரதேசத்தின் சராசரி அளவை விட, 9.5 ஆண்டுகள் அதிகம். இந்த நிதிக்குழுவின் பரிந்துரை காலம் முடியும் போது, தமிழகத்தின் சராசரி வயது, 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதாவது, நாட்டிலேயே முதியோர் அதிகம் வாழும் மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும். முதியோர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு, அடுத்த, 10 ஆண்டுகளில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இதை நிதிக்குழு கவனத்தில் வைத்து, சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தை வழங்க வேண்டும்.
3) நாட்டிலேயே நகரமயம் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம். பெருகும் நகர மக்கள் தொகைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க நிறைய நிதி தேவை. நிலவளம் மற்றும் நீர்வளம் குறைவாக உள்ள நிலையில் இது மிகப்பெரிய சவால். எனவே, சென்னை போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, அதிக நிதி மற்றும் மானியங்களை வழங்க வேண்டும்.