பசி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து ஜி - 20 மாநாட்டில் மோடி பேச்சு
19 கார்த்திகை 2024 செவ்வாய் 03:01 | பார்வைகள் : 142
பிரேசிலில் நடக்கும் 'ஜி - 20' உச்சி மாநாட்டில், 'சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, மேற்காசிய நாடான நைஜீரியாவுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார்.
அங்கு, அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து பேசினார். அங்கிருந்து புறப்பட்ட மோடி, தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு நேற்று சென்றடைந்தார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று நடந்த, 'ஜி - 20' உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார்.
பாராட்டு
மாநாட்டின் துவக்க அமர்வில், 'சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:
ஜி - 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு பாராட்டுகள்.
இந்த மாநாடு, நிலையான வளர்ச்சி என்ற இலக்கை மையமாக வைத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த அணுகுமுறை, உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை எடுத்துக் காட்டுகிறது.
கடந்த ஆண்டு டில்லியில் நடந்த ஜி - 20 மாநாட்டில் மக்களை மையமாக வைத்து, 'ஓர் பூமி; ஓர் குடும்பம்; ஓர் எதிர்காலம்' என்ற மையக்கருத்தை முன்னெடுத்து செல்கிறது.
வறுமை மற்றும் பசியை போக்க இந்தியா பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில், 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை அளித்து வருகிறோம். 'அடிப்படைக்கு திரும்புவோம்; எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவோம்' என்ற எங்கள் அணுகுமுறை சிறந்த பலனை அளிக்கிறது.
தட்டுப்பாடு
உலக அளவில் தற்போது நடக்கும் போர்களால், உலகளாவிய தெற்கில் உணவு, எரிபொருள், உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நேரத்தில், பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை நிறுவுவதற்கான பிரேசிலின் முயற்சி பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, தென் அமெரிக்க நாடான கயானா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்திக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.
நைஜீரிய
அதிபருக்கு பரிசுநைஜீரியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவுக்கு, வெள்ளியால் ஆன பஞ்சாமிர்த கலசத்தை பரிசாக அளித்தார். மஹாராஷ்டிராவின் கோலாபூரில் வடிவமைக்கப்பட்ட இந்த கலசம், 'சிலோபர் பஞ்சாமிர்த கலசம்' என்று அழைக்கப்படுகிறது. மிக அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கலசத்தின் மீது மலர்கள், கடவுள் உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.